அவன் வேலைகளிலிருந்து ஓய்வுபெற்று சரியாக நூறு நாட்கள் முடிந்திருந்தன.
ஒய்வு என்றதும் அரசுவேலை என்று நினைத்துவிடாதீர்கள். அவனின் வயது 55 . சுயதொழிலில் அளவுகடந்த மன உளைச்சல். தானாகவே ஒய்வு பெற்றுக்கொண்டான்.
சொந்தஊருக்கு செல்லலாம், கொஞ்சம் மன அமைதி கிடைக்கும் என்று கிளம்பினான். அது ஒரு அழகிய குக்கிராமம்.
கல்லூரிநாட்களில் கோடைவிடுமுறை என்றால் அந்த கிராமமே அவனுக்கு கதி.
அவன் அத்தைமகள், காதலி. மிகுந்த அழகானவள். அவளுக்குக்கூட அவள் உதட்டில் ஒரு அழகான........ சரி அதுவல்ல முக்கியம், தோல்விக்கண்ட காதல்.
அந்தக்கிராம வீடு, ஊருக்குள் செல்லும் பாதைகளனைத்தும் கொஞ்சம் மாறிவிட்டிருந்தன. அங்கிருந்துதான் இந்த மரப்பலகையினாலான பெஞ்ச் என் தந்தையின் பங்குக்காக கிடைக்கப்பெற்றது. தேக்கினாலானது.
குடும்பம் மிகவும் பெரியது. எங்களின் தாத்தாவின் சகோதரர்கள் குடும்பங்கள் பற்றிகூட நாங்கள் அறிந்துகொண்டிருக்கவில்லை.
பள்ளிநாட்களில் செல்லும்பொழுது என் பத்து வயதில் என் பாட்டி, அதில் படுத்திருப்பாள்.
பச்சையாத்தா, அவள் பெயர். அப்பொழுது வயது தொண்ணூறு. ஆனாலும் காலையிலும், மாலையிலும் அந்தக்கூனுடன் வீட்டை முழுவதும் கூட்டிப்பெருக்கிவிடுவாள். வேறு யாரையும் செய்யவும் விடமாட்டாள்.
எங்கள் இளையபட்டாளம் அவளின் பின்பலம் அறியாமல், மேம்போக்காக அவளைச் சீண்டிநிற்போம். அவள் தூங்கும்பொழுது மூக்கினுள் மாத்துக்குச்சியை நுழைத்து உசுப்பேற்றுவோம். கோபம்கொள்ள மாட்டாள். அதுதான் சிறப்பு. மேலும் மிகவும் அன்பானவள்.
அவள் ஒருநாள் இறந்தேவிட்டாள். நாங்களும் எந்த எதிர்பார்ப்புமின்றி காலையில் கிளம்பி மாலையில் வந்துசேர்ந்தோம். இந்தக்காலத்தில் கிராமத்திற்குச்செல்ல 2 மணிநேரம் ஆகின்றது.
அங்கு வீட்டின்முன் ஏகக்கூட்டம் கூடிநின்றது. திருமணவிழாவினைப்போல.
முதல்முறையாகத் திகைத்துவிட்டிருந்தேன். அப்புறம் விசாரித்ததில் தெரியவந்தது, எனக்குப் பெரியதாத்தாக்கள் மட்டுமே பத்துபேர் என்பது. அதுவரை அவர்களெல்லாம் என் உறவுக்காரர்களேன்று தெரிந்துகொண்டதில்லை. மேலும் எந்தநாளும் அவர்களை நான் கண்டதுமில்லை.
அவர்கள் பெரும்பணக்காரர்கள். சொல்லப்போனால் என்தந்தையே ஒரு பெரியதாத்தாவிடம்தான் வேலை . பார்த்துக்கொண்டிருந்திருக்கின்றார் .
மற்றவர்களுடன் இருக்கமாட்டேன் என்றுதான் பாட்டி என் தாத்தாவீட்டில் இருந்திருக்கின்றாள்.
அந்த பலகைக்கட்டிலில் இதுவரை எத்தனையோமுறை நான் படுத்திருந்திருக்கிறேன். ஆனாலும் அவள் நினைவு வந்ததில்லை.
வீடு என்னை அவளின் நினைவுகளில் கரைத்துவிட்டது.
தாத்தாதான் ஒருநாள், கடைசி நாட்களில் அவளைப்பற்றி கூறினார்.
மிகவும் நல்லவள்.
கேட்டவற்கெல்லாம் உதவுபவள்.
கெட்டவர்களை பார்க்க மறுத்துவிடுவாள்.
அப்படித்தான் மற்ற தாத்தாக்கள் அனைவரையும் 15 வருடங்களாக சந்திக்க அனுமதித்ததே இல்லை.
நல்ல ஞாபக சக்தி.
நான் பிறந்த சமயம், இவன் தொழிலில் சிறப்பாக வருவான், என்று வாழ்த்தினவள்.
சமையலில் கில்லாடி.
மாடுகள் கட்டி பால் விற்பாள். அது அவளின் பொழுதுபோக்கு.
வீட்டிற்கு வரும் யாருக்கும் விருந்தளிக்காமல் அனுப்பியதில்லை.
பணத்தை மதித்ததில்லை. அன்புக்கு மட்டுமே மரியாதை.
பாட்டா திடீரென்று பணத்தையெல்லாம் இழந்து நின்றபொழுது, ஆறுதல்சொல்லி அவளின் சம்பாத்தியத்தில் அவருக்கு சோறு போட்டவள். பாட்டா இறந்தபின்னும் குடும்பப்பொருப்பினை கையிலெடுத்து, எல்லோரையும் கரையேற்றினவள்.
அந்த வீட்டினுள் இன்னும் அவள் இருந்துகொண்டுதான் இருக்கிறாள். இல்லையானால் அவள்பற்றின சிந்தனைகள் இந்தநிமிடம் எனக்குத் தோன்றுதலேன்.
அவளுக்கு சிறுவயதில் நாங்கள் கொடுத்த சில்மிஷ விளையாட்டுகளை எண்ணி வெட்கமாக இருந்தது.
வெளிவரும்வேளை ஒரு இனம்புரியாத நிம்மதி. அவள் படுத்துறங்கின பலகைக்கட்டில் இப்பொழுது என்னிடம்தான் உள்ளது.
வீட்டினுள் நுழைந்தவுடன் அந்தக்கட்டிலில் படுத்தேன். கண்களில் சில நீர்த்துளிகள். என்னவாக இருக்கும், என்னை ஆசீர்வதித்திருப்பாளா.
No comments:
Post a Comment