Showing posts with label dedicated. Show all posts
Showing posts with label dedicated. Show all posts

Friday, 6 April 2012

காதலுக்கு ஓர் விளக்கம்

விலகிக்கிடந்த வாழ்க்கையினை
ஒழுங்குபடுத்தின உன்னை,
தெய்வமாகவே தரிசிக்கிறேன்.

அது உன் நெற்றிப்போட்டினை
சரிசெய்த நிலையில்லை,
உண்மைக்காதலின் ஆராதனை.

உனக்குமட்டுமே புரிந்த என்னை,
எனக்குமட்டுமே தெரிந்த உன்னை,
சங்கமித்த ரகசிய ராப்பொழுது.

மனிதத்தின் மறுபக்கம் உணர்ந்து,
மழலைச் செல்வமளிக்கத் துணிந்த
ஓர் அன்பின் அரவமற்ற சிந்தனைத்துளி.

சரியா தவறா நெறியா பிழையா
என்பதல்ல இந்த உறவு நிலை,
இறை கொண்டுதந்த ஜென்மஉறவு.

நம் நேசம் வான்வெளி போல்
நீள்வதில்லையன்பே, அஃது
வான்வெளியினில் கரைந்துகிடப்பது.

காட்சிப்பிழை என உலகம் மறுப்பினும்,
கண்ணே, முளைந்த முளை, விதைக்குள்
செல்ல இங்கு விதியில்லை, உணர்.

நியாயமற்றது என மனம்
நினைப்பினும் நிலைகொண்டபின்
நினைவுகள் விடுவதாயில்லை.

வானின் சுகத்துக்கும், வாழ்வின்
சுகத்துக்கும், வரையறையில்லா
மனிதசுகத்துக்கும் முடிவேயில்லை,

ஆதலினால் காதல் கொள்.

Tuesday, 13 March 2012

ஒரு இனிய பயணம்

சுதந்திர வாழ்க்கை
சுற்றித் திரியுது காக்கை.

சுகமான சிந்தனை
சுளுக்கு இல்லாத மனதினை,
சுமந்த சுத்தக்காற்றின் சுகந்தம்.

சுகந்தம் பரப்பும் நினைவுகளில்
சுமையாய் நிகழும் கனவுகள்.

கனவுகளின் சங்கமம்
நிலவுத்தோழியின் இனிய காதல்.

உறவுக்கும் கைகொடுக்கும்
நிறைவுக்கும் வழிவகுக்கும்.

உறவு சொன்ன ஒருவனுக்காக வாழ்பவள்.
உலக வாழ்க்கைப் பள்ளியிலுமானவள்.
இனிய உலகை இன்பமாக்க விழைபவள்.
இன்னொரு முறை அவனைக்காண நினைப்பவள்.
சின்ன சின்ன ஆசைகளைச் சுமப்பவள்.
சிறுகச் சிறுக உயிரையும் குடிப்பவள்.
உள்ளமெல்லாம் வெள்ளையாகச் சிரிப்பவள்.
உள்ளதெல்லாம் அவனுக்கே கொடுப்பவள்.

உனக்காகவே நான்.

Friday, 10 February 2012

ஊடல் காதலில்


மூளையினுள் நிரம்பிக்கிடக்கும்
நினைவுகளின் கனவலைகள்,
அலையாய் மலைந்து உருவுற்றபின்,
கருவுற்ற காவியக்காதல் இது.

தேன் சுமந்த மலர்களை தென்றலில்
ஆடவிட்டு, பந்தலாய் படரவிட்டு,
மெல்லிய தண்டினை கொண்ட
வல்லிய வளைந்த கொடியே,

வண்டிசைக்கும் மெல்லிசையை
கலந்து காற்றில் கரைத்துவிட்டு,
கண்ணசைப்பில் கண்டபொழுது
கவிழ்ந்து கிடக்கும் கொடியிடையே,

கொட்டிக்கொட்டி புழுவுக்கு
உறவு கொடுக்குமாம் குலவி.
குத்திக்குத்தி கொன்று குற்றுயிராய்
விட்டுச் சென்ற காதலியே!

தவறுதான் என்ன? ஊடல்
என்ன காதலில் முரணா?
எனக்குள் முட்டிக்கிடக்கும்
காதலுருவை உணர்த்துதலெப்போ? 

Monday, 2 January 2012

நானும் நீயும் நாமாக

பணம் பார்த்து மணம் கொள்ளத்தேவையில்லை.
இனம் பார்த்து மனம் வாழ்வதில்லை.

மனம் பார்த்து காதல் வளர்வதில்லை.
மணம் பார்த்து மலர் மலர்வதில்லை.

சினம் பார்த்து பின் இனம் நிற்பதில்லை.
தினம் பார்த்து பணம் வருவதில்லை.

காதல் பார்த்து காமம் செல்வதில்லை.
மலர் பார்த்து மஞ்சம் கொள்வதில்லை.

குணம் பார்த்து சினம் வெல்வதில்லை.
சனம் பார்த்து தினம் புலர்வதில்லை.

காமம் பார்த்து நாணம் நடுங்குவதில்லை.
மஞ்சம் பார்த்து நெஞ்சம் நேசிப்பதில்லை.

நட்பு பார்த்து குணம் கெடுவதில்லை.
ஏழ்மை பார்த்து சனம் மகிழ்வதில்லை.

நாணம் பார்த்து மானம் போவதில்லை.
நெஞ்சம் பார்த்து வஞ்சம் தீர்வதில்லை.

கேடு பார்த்து நட்பு வளர்வதில்லை.
புகழ் பார்த்து ஏழ்மை சிரிப்பதில்லை.

மானம் பார்த்து வாழ்வு சிறப்பதில்லை.
வஞ்சம் பார்த்து தாய்மை துடிப்பதில்லை.

சுற்றம் பார்த்து கேடு கெடுவதில்லை.
மன்றம் பார்த்து புகழ் வீழ்வதில்லை.

வாழ்வு பார்த்து நானும் வரவில்லை.
தாய்மை பார்த்து நாமும் பழகவில்லை.

Wednesday, 21 December 2011

என்று கனியும் இந்தக் காதல்

மின்சாரம் தொட்டதும் பட்டென
எரிந்துவிடும் மின் விளக்குபோல்,

துடிப்புடன் மூளையினுள் நீந்திக்கிடக்கும்
தூண்டப்பட்ட இன்ப நினைவலைகள்,

உன்பற்றிய எண்ணங்கள் உரசினவுடன்
பற்றி எரிக்கிறது என் நரம்பு மண்டலத்தை.

சக்தியின் மருவாய் பூமியில் மண்குழைத்து
பிராணன்கூட்டி உயிர்ப்புடன் வெளித்தள்ளும்,

ஒரு காட்டுக் கொடியினை, பூத்து
மலரச் செய்ய வைக்க முடிந்திருக்கின்றது,

நம்மையும் கடவுளிடம் இட்டுச்செல்லும்
காமம், தவறில்லை என்பது புரியவில்லையா?

மல்லிகையின் மணத்தில், மங்கையின்
மணத்தையும் குழைத்து வந்த தென்றல்,

தேனாய் இனிக்கும் கூப்பதநீர் காய்ச்சிய
காதலியின் கைருசி கலந்த இனிமை,

விரவிக்கிடக்கும் காட்டெல்லையில்,
விலகிக்கிடக்கும் வயல்வேளிபோல்

என்னைவிட்டு உதறிநிற்கும் கண்மணியே,
கண்டுகொள்ளாயோ புதிர்ப் பெண்மணியே,

இந்த உடலில் உயிர் ஒட்டிக்கிடப்பதுவும்
கட்டிமிதப்பதுவும் உனக்காகவே என்பதினை.

விக்கலும், நகைப்பான உன் நக்கலும்
உன்னையே நினைவுபடுத்திய வண்ணம் நிற்க,

கொலைக்களம் விரித்துக்கிடக்கும் விழிகள்,
கலைத்தளம் ஆடிநிற்கும் உன் கொடியிடைகள்,

உயிரினுள் சின்னச்சின்ன கொலைகள்
செய்து, தோளில் வளைய வருவதேப்போழுது?

கூட்டுக்குள் துணை தேவையில்லை.
வாட்டும் துன்பமும் இங்குயில்லை.

பாட்டுக் குயில்கள் கூவிக்களித்திட,
கூடித்திரிந்திட கட்டுப்பாடு எங்கும் இல்லை.

தோட்டத்து மலர்கள் மலர்ந்து சிரித்திட
மணம்பரப்பி கலந்திட மறுப்பதுமில்லை.

தொட்டுவிட்ட தென்றலும் தொடுசுகம்
வேண்டிவந்து தடவித் தழுவுவதுமில்லை.

சொட்டிவிடும் மழைக்கும் முகவரி
கண்டு பொழிந்திடும் அவசியமில்லை.

வட்டமிடும் வண்டுகள் பூவினுள் வீழ்ந்து,
தேன்குடித்திட அனுமதி வேண்டுவதில்லை.

காட்டு மான்கள் காலாற குதித்து நடந்திட
வீட்டு வெளியில் விண்ணப்பமிடுவதில்லை.

சுட்டுவிரல் எனைநோக்கிக் காட்டிட்ட,
சுகராகம் எனக்குள் சுந்தரமாய் பாடிட்ட

கட்டிக்கரும்பே, கனியமுதே, கண்மணியே,
கலையாத கொடிமுல்லையே, காதலியே,

வெட்டிச்செதுக்கின சிலையே, மனக்கூட்டினுள்
நுழைய என்னை மட்டும் அனுமதி மறுப்பதேனோ?

வைகைக்கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பாத்தா சொல்லு.

மிஞ்சிநின்ற பஞ்சு நெஞ்சம்தனை
கெஞ்சி கெஞ்சித் தொலைத்தேவிட்டேன்.

அஞ்சி அஞ்சி மயங்கி மறைந்தேநின்று
தஞ்சம் கொள்ள மறந்தேவிட்டேன்.

கார்மேகம்தனையே கண்ட மயில்,
தொகைதனையே விரித்தாடக்கண்டு,

வான் அளந்த உறவாம் வான்கோழி
வாடிநிற்குதே தன் வடிவழகை கண்டு.

குரல் மாறிக் கூவும் குஞ்சிக் குயிலினை
கூட்டிலிருந்து விரட்டி நிற்குமே காக்கை,

கொண்ட அன்பினை கொன்று சிதைத்து,
கண்ட பொழுதெல்லாம் ஏங்கும் குயிலை.

கண்டு கண்டு வெம்பித்துடித்தே
விம்மிவிம்மி வாடிநிற்கும் என்மனம்,

தேடிய மணம், மல்லிகையிலும் இல்லை,
கூடிய காதல், கொண்டவளிலும் இல்லை,

பாடிய குரல் இதமாய், இன்பமாய் கேட்குதடி
ஆடிய தென்றல் ஏற்றிவிட்ட காதலியிடம்.

கார்குழலி உன் அன்பையும் கண்டேன்
கன்னம்குழியும் உன் சிரிப்பையும் வென்றேன்.

சின்னச் சின்ன உன் முகச் சுழிப்பையும்
சிதறிக்கிடக்கும் உன் சிந்தனையையும்,

சிங்காரமாய் சித்தரிக்கும் சிகப்பழகாம்    

உன் செவ்விதழையும் சேரவே துடிக்கும் என்மனம்.

Wednesday, 7 September 2011

மறந்த காதல்

என்னை மறுத்துவிட்டாய்,
ஜாதகம் படித்து கெட்டவனாவான்
என்றவுடன்.

மறக்க முடியவில்லை
பியிந்து போன மனத்தை,
படித்து, பறந்து, பணம் படைத்து, முடிந்த பின்,
அடைந்தேன் அழகு தமிழச்சிகளை,
மலைத்தேன் மலையாள மங்கையரின்
கொங்கைகளை கண்டு,
கனிந்தேன் கன்னடப் பைங்கிளிகளின்
கைகளில் நின்று,
தெலுங்கு நங்கையர் அழகு பற்றி
சொல்ல வார்த்தையில்லை,

நல்லவன், வல்லவன் என்கிறார்கள்
இப்பொழுது , சொல்லட்டும்
உடல் ஒன்றும் மனம்
சம்பந்தம் கொண்டதல்லவே.

ஆனாலும் மாறவில்லை
மனம் உன் நினைவுகளிலிருந்து.

மறுபடியும் உன்னை சந்திப்பேன்
அடுத்த ஜென்மத்தில் நல்ல ஜாதகத்துடன்.

ஜெயிப்பது ஜாதகம்தான்.

கவிதைக்கண்கள்

நீ சொன்னால் சரியாய்தான் இருக்கும்.

கனிந்த கண்ணசைவில் கவிதையாய் பாடினாய்
காதலை கேட்டபொழுது,
முடியாதது என்றாய் காதல் கண்களுடன்,
மணமுடிக்க கேட்ட பொழுது.
பார்க்கும் நேரமெல்லாம் இருக்கின்றாய்
கண்களில் கண்ணீர் கசிவுடன்.
புரியவில்லை எனக்குமட்டும், ஆனாலும்
நீ சொன்னால் சரியாய்தான் இருக்கும்.

Wednesday, 31 August 2011

கர்மவீரர்

தமிழர் மீது தணியா
அன்பு.
கட்டிவைத்த அத்தனை
அணைகள்,
கழனி செழிக்க
நீர்நிலைகள்,
வளர்ந்தெழ வழியமைத்த
ஆலைகள்,
கற்றுத்தெளிய
கல்விச்சாலைகள்,
பசி மறந்து படிப்புணர்த்திய
உணவுத்திட்டங்கள்,
மொத்த நாட்டுக்கும்
மின்சாரம்,
எல்லா துறையிலும் வளர்ச்சிதான்
பொற்காலம்தான் உம் ஆட்சிக்காலம்.
கைவண்டிக்காரன் மகன்
கலெக்டர்.
நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை.
நீங்கள் போட்ட ரோட்டில்
கோடுபோடக்கூட
திறனன்றி திணறி ஓடுகின்றோம்
உதவ நாதியின்றி.
உரம் இட்டுச்சென்றீர்,
எப்படி வளர்கிறோம் என்றுகூட
உணரமுடிய விதைகளுககு.
உடுண்டோடிவிட்டன
காலவருடம் 45
மழைநீர், தென்றல்காற்று, தந்த இறைவன்
கொடுத்தது உங்களை, தானமாய்.
மணம் பதைத்துத்
திகைத்து நிற்கின்றோம்,
நன்மை செய்வது என்பதைக்கூட
மறக்கடித்த இந்த நிகழரசியல்
கலை கண்டு.
தமிழனுக்கு எப்படியும் வெற்றி உண்டு
உங்களால்.

இன்று தமிழ்

ஒவ்வொருநாளும்
காலை மணி ஏழுக்கு
கலைஞருடன்
பேசுவது வழக்கமாம்.
கொசுவை ஒழிக்க வழியில்லை.
goodnight விளம்பர வருவாய்
டிவியில்.
நீர் தர ஆழ்ந்த எண்ணமுமில்லை
நகராட்சி
வரி வசூலிப்பு.
ரௌடிகளின் அரசாட்சி அட்டூழியம்
போலீஸ் கேட்க
நாதியேயில்லை.
மின்சாரம், கேட்கவே வேண்டாம்
நினைத்த பொழுதினில்
அணைப்பு.
பட்டிதொட்டியெல்லாம்
மக்கள் தன்தன் வழி வாழ்க்கை,
அரசை சார்ந்து இல்லாமல்.
நோட்டுக்கு வோட்டு போடும்
ஜனநாயகம்.
அதுகூட ஞாயமாய்
நினைக்கும் மக்கள்!
நன்மை செய்வது என்பதையே
மறக்கடித்த
உம் தலைவர்,
வாரிசுகள் அனைவருக்கும்
நாட்டை பட்டா போடும் உம் தலைவர்.
கசக்கி கவிதைஎழுதும் உமக்கு
இவை கேட்க மனமில்லையா
வைரமுத்துவே!
இந்த நட்பு என்ன
புகழுக்கு மட்டும்தானா.
தமிழுக்கு இல்லையா!
உருப்படியாய் ஏதாவது செய்ய முயலும்.

பூர்வீகவீடு

ரோஜா பாதங்கள் பதித்து
அன்ன நடையுடன்
வலம் வந்த வீடு.
ஓங்கி வளர்ந்த
ஆலமரத்தின் அசைவுகளில்
தலையை ஆட்டிப்பார்க்கும்
ஆந்தையின் அழகை
அருகினிலேயே பெற்ற வீடு.
பின்னாளில் கொசு உற்பத்திக்கேந்திரமாய்
உருப்பெற்ற குளுமையான ஆற்றின்
கரையினில் அமைந்த வீடு.
வைகாசியில் மாரியம்மாளின்
திருவிழாவினை கண்டு களிக்க
தலைமையேற்ற வீடு.
குடையுடனேயே, முழுமையான
கம்பீர வாழ்க்கை வாழ்ந்த தாத்தா,
24 மணிகளில் 23 மணிகள் போதாமல்
தேனியின் வாழ்க்கை பெற்ற பாட்டி.
குடிப்பதேன்னவோ
ஆவின் மடுவினிலேயே பால்,
இடும் முட்டை, தரைபடும் முன்
கொட்டப்பட்ட தோசையில்
அரைவேக்காடாய்,
மற்ற நேரமெல்லாம்
கொடிக்காப்புளி வேட்டை, அந்தியில்
மொத்த குடும்பமும் தாயக்கட்டம்,
ஓர விழிகளில்
அத்தைமகளின் முதற்காதல்,
இப்படியே
வருட விடுமுறை நாட்கள்
அத்தனையும் கழிந்த வீடு.
சட்டையுரித்த பாம்பு, அழகின் உச்சம்.
ஆனால்
காரைஉதிர்ந்து செங்கல்கள்
வெளித்தெரிய சட்டை கிழிந்து
எழும்பும் தோலுமாய்
நின்றிருக்கும் வீடு, அழகின் எச்சமாய்.
வாரிசுகள் மொத்தம் பதினெட்டுப்பேர்,
உறவுகள் ஓட்ட வகையில்லை.
குட்டிசுவராகிப்போன வெட்டி வரலாறு.
இன்னமும் சிரித்துக்கொண்டே
நிமிர்ந்து வரவேற்றுநிற்கும்
எங்கள் கிராமத்து வீடு.

Monday, 29 August 2011

ஓஷோ

உயிர்ச்சக்திகள், நாத, வித்துகளை
வெளியுந்தும் கலவி,
நிமிட இன்பம்.
உள் பரப்பும் வித்தை,
முழுநாள் இன்பம்.

உடல் தசைகளின் உள் அழுத்தமும்
இறுக்கமும் தந்திடுமே கலவி.

தசை முழுமைக்கும் தளர்வுக்கலையே
தியானமுமாமே.

ஈசனின் மகள்

வெடித்துச் சிதறி விழுந்த
விதை, சிறு தளிராய் துளிர்த்தது.

கதிரவனின் கண்படாது மறைக்க
மேகம் பரப்பினான்.
கார்மேகத்தினின்று சில நீர்த்துளிகளைத்
தூவினான்.

வளர்ந்து சிரிப்புடன் மகிழ்ந்து
செழித்துநின்றது.
ஒரு நாள் மணம் பரப்பிநின்றது
மலர் மலர்ந்து.

அழகு மலராய், இனிய மணத்தை
வார்த்த ஈசனுக்கு நன்றி.

எனதன்புத்தாய்

உன் தாய்வீடு தங்கத்தை அங்கமாய்
கொண்டிருப்பினும் பற்றில்லை உனக்கு.

மணாளனின் கரம் பிடித்தபின் மண்சோறும்
விருந்துணவுதான் உன் வாழ்க்கையில்.

குடும்பத்துக்காய் நகைகளை விற்றும்
வருத்தமில்லா நாட்கள்தான் உனது.

நகைகள் உடல்பட்டு மினுக்கும் உலகில்
ஒரேயொரு பட்டுமட்டுமே மினுங்கும் உன்
ஒவ்வொரு விழாக்களிலும்.

நகைகளை உன் கழுத்து அறிந்ததில்லை
அவை கழட்டப்பட்ட பின்னர்.

வாழை, தன் மொத்த உடலையும்
சார்ந்தவருக்காய் உரித்துக் கொடுப்பதுபோல்,

உன் உடமைகளனைத்தும் மற்றவர்
நன்மைக்காய் விட்டோழித்தாய்.

வயதுவந்தபின் மக்களின் கைகளிலிருந்து
ஒரேயொரு வைரத்தோடு விரும்பி நின்றாய்.

அதைக்கூட உனக்கு அணிவித்து ரசிக்க
முடியாதபடி காலன் உயிரைப் பறித்துவிட்டானே.

என்செய்வேன் நான், வைரம் காணும்
பொழுதெல்லாம் கண்ணீர் சிந்துவதைத்தவிர.

தாத்தாவின் வாழ்க்கை

ராஜ குடும்பப் பிறப்பினில்
மூன்றாம் சிங்கமாயே இவர்.

பட்டுச் சொக்காய் அணிந்துதான்
வாழ்வின் துவக்கம்,

பஞ்சனை மெத்தையிலேயே
இரவின் உறக்கம்,

இரவு பகல் ஊழியம் செய்ய
உறவு மக்கள்,

பள்ளி செல்ல என்னவோ
சாரட் வண்டிதானாம்,

எல்லாம் அறியாப் பருவம்
வரையினிலே மட்டுமே,

விவரம் அறிந்த சிலநாளிலே,
உறிக்கப்பட்டது பட்டுச் சொக்காய்.

மாறிய வாழ்க்கை கால்நடையாகியது
பள்ளி செல்லும் வழியை.

வந்து நின்றதாம் வாயிற்படியில்
மஞ்சளிலே ஏதோ கடிதம்,

கொடுத்த தகப்பன் தலையிலே கை,
தாய் தலைகவிழ்ந்து கண்ணீருடன்.

மாலையில் மறைந்த ஆதவன்
உதிக்க மறுத்துவிட்டான் காலையில்.

பதினான்காம் வயதில் ஒரே இரவில்
இடிந்துவிட்டது வாழ்ந்த இவர் கோட்டை.

தாங்கி நின்று தன்மானம் காத்து தயங்கித்
தயங்கியே முடிந்தது இவர் வாழ்க்கை.

பதினாலு வயதுக்கு முன் கோடிக்கு அதிபதி,
அடுத்தநாள் கோடி உடுத்த வழியில்லா தளபதி.

வேண்டாமடா இறைவா இனியொருமுறை
இப்படியொரு நிலை உலகில் எவர்க்கும்.