உன் தாய்வீடு தங்கத்தை அங்கமாய்
கொண்டிருப்பினும் பற்றில்லை உனக்கு. மணாளனின் கரம் பிடித்தபின் மண்சோறும்
விருந்துணவுதான் உன் வாழ்க்கையில்.
குடும்பத்துக்காய் நகைகளை விற்றும்
வருத்தமில்லா நாட்கள்தான் உனது.
நகைகள் உடல்பட்டு மினுக்கும் உலகில்
ஒரேயொரு பட்டுமட்டுமே மினுங்கும் உன்
ஒவ்வொரு விழாக்களிலும்.
நகைகளை உன் கழுத்து அறிந்ததில்லை
அவை கழட்டப்பட்ட பின்னர்.
வாழை, தன் மொத்த உடலையும்
சார்ந்தவருக்காய் உரித்துக் கொடுப்பதுபோல்,
உன் உடமைகளனைத்தும் மற்றவர்
நன்மைக்காய் விட்டோழித்தாய்.
வயதுவந்தபின் மக்களின் கைகளிலிருந்து
ஒரேயொரு வைரத்தோடு விரும்பி நின்றாய்.
அதைக்கூட உனக்கு அணிவித்து ரசிக்க
முடியாதபடி காலன் உயிரைப் பறித்துவிட்டானே.
என்செய்வேன் நான், வைரம் காணும்
பொழுதெல்லாம் கண்ணீர் சிந்துவதைத்தவிர.
No comments:
Post a Comment