இசைந்த முத்தச்சுமை, சிந்திவிடாமல்
சேகரித்த சுவை மூளையில் கலக்க,
உதடு உரசி உதிர்ந்த உயிரினை
உலையிலிட்டு உளுப்பினாய்.
சித்தம் கலங்கி, சிலையினுள் சிணுங்கித்
தவித்து, சித்திரத்தில் மைஎழுதி,
சின்னதாய் விம்மிக் குதித்து
மொத்த சுகத்தையும் பூசினாய்.
புதியதாய் ஒரு புன்னகை,
விழிதனில் புது மின்னல் கீற்று.
புல்வெளியின் சுதந்திரப் பனிக்காற்று
படுத்த புழுதியிலும் புது ஆனந்தம்
முத்தச் சாறு சுவைத்து எடுத்து
பித்தச் சாறு பிழிந்து கொடுத்து
சகதியிலும் ஒரு புரட்டல்,
வானத்திலும் பறந்து ஒரு வட்டம்.
என்ன ஆயிற்று இவனுக்கு
கற்பனையில் காற்றாடும் மனம்.
காதலியைக் கண்டபொழுது
கூத்தாடும், கூண்டினுள் உயிர்.
வந்ததென்னவோ தாயின்
கர்ப்ப கிரகத்திலிருந்துதான்.
வாழ்வதென்னவோ உந்தன்
மையிட்ட காந்தக் கண்களுக்குள்தான்.
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நானறிவேன்.
பிரித்துத் தெறித்த ஒரு வார்த்தையின் வீச்சில்
உன் காதலின் முழுவீச்சையும் உணர்வேன்.
நடையழகின் இடை நடனத்தினில்
மறைந்து கிடக்கும் மனமகிழ்ச்சியும்
பூத்துக்கிடக்கும் புன்னகையின் ஓரத்தில்
புயலாய் புழுங்கிக்கிடக்கும் காமமறிவேன்.
அனலாய் கொதித்துக்கிடக்கும் உடல்மொழி
உணர்த்திடும், எறிந்து நிற்கும் பெருமூச்சு.
கவிழ்ந்து கிடக்கும் உன் நிலவுமுகம்
மறைத்திடும், மலையென எழுந்து
நிமிர்கையில் கோபத்தனல் வீசிநிற்கும்,
விச்சின் பதில் உணர்த்தாத கண்களுக்கு.
No comments:
Post a Comment