Wednesday, 14 December 2011

காத்திருக்கும் வார்த்தைகள்

பாடிநின்ற உன்னைத் தேடியலைந்து
வாடிநின்று உருண்டு வழிந்த வியர்வையை,

நிலம் சேருமுன் தடவித் துடைத்துச் சென்ற,                                                   தென்றலின் முகவரியினைத் தேடியலைகிறேன். 


சோகத்தில் சுகம் பாடித் திரிந்தவேளை,
சுத்த சுர இசையினால் மனம் வருடி,

மருந்திட்டுச் சென்ற மாங்குயிலின்,
மரம்நின்ற திசை நோக்கி வாடி நிற்கிறேன்.

அது ஒரு மயிலா? மாமரத்துக் கிளியா?
மணம் நிறைந்த மயக்கும் மல்லிகையா?

மனமில்லாமல் சேரத்துடிக்கும்
மஞ்சள் வெயில் மாலைநேரத்து மங்கையா?

வார்த்தைகளனைத்தையும் உருவிவிட்டு
வானம் பார்த்துக்கிடக்கும் வானவில்லா?

என்னிடம் வந்தால் கொண்டுவருவதென்ன?
உன்னிடம் வந்தால் கொடுப்பதென்ன?

என்று மருவிக்கிடக்கும் கஞ்சன்போல்,
வஞ்சம் செய்து நிற்கிறாயே பதில்சொல்.

நின்ற இடத்தில் நிலைகுத்தியே நின்று,
நிமிர்ந்து நோக்கும் தினவும் இன்றி,

நிலையிழந்து தவிக்கும் மனம்,
நிலைகொள்ளச் செய்யும் வழிஎப்படி?

பேசுவதெல்லாம் உண்மையைமட்டுமே,
என்றொரு வறட்டு உறுதிமொழி.

மௌனம் களைந்து மந்திர வார்த்தைகொண்டு,
பதில்மொழி உதிர்ப்பதேப்போழுது?

கலைந்து நொறுங்கிக் கிடக்கும் இதயம்
துடிப்பை நிறுத்துமுன் சேவிக்கவருவாயா?

No comments:

Post a Comment