Showing posts with label kavithai. Show all posts
Showing posts with label kavithai. Show all posts

Saturday, 14 July 2012

பெண்மை

குயிலின் ஆனந்தப் பாட்டு,
கூவிநின்ற திசை நோக்க,
பாடினவன் பறந்தேவிட்டான்.

விரட்டிநின்ற தென்றல் வலிமை,
விட்டோடிப்பறந்த, அலையலையாய்
தவன்ற மேகக்கூட்டங்கள்போல்.

என்னிம்சை போதுமென்று
மௌனமொழி காட்டிநின்றாள்
மந்திரப்புன்னகைக்காரி இமசையரசி.

கண்ணழகிருந்தென்ன, கன்னம்
கிண்ணமாய் அமைந்தென்ன,

எண்ணம் இனிமையாயிருந்தென்ன,
எழுதி வைத்த மை கருத்தென்ன,

சங்கீதமொழி உரைத்தென்ன,
சந்திரனை முகம் கொண்டென்ன,

கள்ளமில்லா அன்பு பொழிந்தென்ன,
கருணைக் கடலாயிருந்தென்ன,

கசக்கிப் பிழியத்தான் பெண்மை.
அடிமைப்படுத்தத்தான் ஆண்மை.

பூமியினை பூத்தே நிற்கும் கடப்பாரைகள்,
பொறுமைகொண்டு அடங்கிக் கிடப்பதால்.

Saturday, 7 July 2012

காதலை மறந்துநின்ற கிளி

உன்னை .............நினைக்க மறக்கவில்லை ..........

எத்தனை முறை என்னைஉனக்கு
காண்பித்தும்,
உன்பித்தும், என்பித்தும்
குறையப்போவதில்லை.

நீ குடித்து கடல்நீரினை வத்தடிக்கமுடியுமா?
அல்லது
நான்தான் வடித்த முத்தத்தால் உனை நிரப்பிடமுடியுமா.

சேர்ந்தபின்
நம்மைப் பிரித்திடத்தான் முடியுமா.
சேர்த்துவைத்த
நட்புக்காதலைத்தான் மறைத்திடல் முடியுமா.

இலங்கையின் மடியினில் தவழ்ந்து,
இளங்கையின் மணம் ருசித்து,
கலங்கலில் கவிதைகள் படித்து,
கணங்களை காற்றினில் பறக்கவே விட்டு,

சிக்காகோவினுள் புகப்போகும்
திருவிளக்கே, சிறுனகையே,
சிற்றிடைச் செந்தாமரையே,
வருக வருக நிலா மனம்கனிந்து.

குயிலின் ஆனந்தப் பாட்டு,
கூவிநின்ற திசை நோக்க,
பாடினவன் பறந்தேவிட்டான்.

விரட்டிநின்ற தென்றல் வலிமை,
விட்டோடிப்பறந்த, அலையலையாய்
தவன்ற மேகக்கூட்டங்கள்போல்.

என்னிம்சை போதுமென்று
மௌனமொழி காட்டிநின்றாள்
மந்திரப்புன்னகைக்காரி இமசையரசி.

Sunday, 27 May 2012

மயங்கின மலர்

புதிய மஞ்சளாடையில் புதிய காலை,
அதில் புத்தம்புதிதாய் ஆதவன்,

புதிய ஒளிக்கதிரினுள் ஒளிந்துகொண்டு
ஓடித்திரிந்த உயிருள்ள புதிய தென்றல்,

தென்றலின் ஸ்பரிச உரசலில்
புத்துயிராய் மலர்ந்த புது மலர்.

தேனுண்ட வண்டு மயங்கக்
கண்டோம் இவ்வன உலகத்தில்,

வண்டுண்ட தேனால் மலர் மயங்கக்
கண்டதென்னவோ இந்நிலவொளியில்தான்.

கவிதை எழுதுவாயா என்றேன்.
விழிகளில் விருத்தம் எழுதிநின்றாள்.

உதட்டசைவினில் சொக்கும்படி
இனிய குரலில் பாட்டுப் பேசினாள்.

அழகிய ஒடிந்த இடைநடையில்
நடனமும் ஆடிக்காட்டிவிட்டாள்.

நா நனைய சுவையாய் சமைப்பாயா?- கேள்வி.
ஒட்டின உதடுகள் சுவையாக்கின கொட்டிய நா.

நடைபயிலும் குழந்தைக்கு வயிறு புடைக்க
உணவூட்டி மகிழும் தாய் போல்,

கவிதையுலகில் என் எண்ணங்கள்
அனைத்தையும் விரவிக் கரைத்துவிட்டும்,

மலர்த்தேனுண்ட வண்டினைப்போல்
என்னுள் தேடித்தேடிக் குடிக்கின்றாயே,

போதவில்லையா இந்த போதை, மீள
மனமில்லையா உன்னின்ப மூளைக்கு.

காதலும் கவிதைகளும் மட்டுமே

இந்த அறிமுகம் கூட நன்றாகத்தான் இருக்கிறது,........................

அறிமுகம் நன்றுதான். அதற்காக
நரிமுகம் காட்டிவிடாதே!

சரிமுகம் காட்டி கண்ணுக்குள் வைத்து என்னைக்கட்டிவிடாதே.

சிரிமுகம் காட்டி சிருச்சிருக கொன்று
வதைத்துவிடாதே.

பரிமுகம் காட்டி உன்னுள் என்னைப் புதைத்துவிடாதே.

மௌனங்களால் விலங்கிடப்பட்டு,
விலகிக்கிடந்த குழம்பின வாழ்க்கைதான்.

பயமறியாத கபடமில்லாத மனங்களின்
துணையுடன் கட்டப்பட்ட வீடுதானிது.

இருந்தும் முகம் பழகின சமயம்,
முடிந்து நிற்கின்ற காதல் நிலைதான்.

வஞ்சங்களும், வம்பு வார்த்தைகளும்
நெஞ்சை உருக்கிச் சிவப்பான நினைவுகளும்தான்.

நிஜங்களை உணரமறுக்கும், பணம்
தின்னும் பிணப் பேய்களையும் உணர்ந்தபின்,

விடுதலையாகி வாழ்ந்துகிடப்பது என்னுள்,
கரைந்து விழுந்துகிடக்கும் இக்கவிதைகளே

இம்சையரசிதான் நீஎனக்கு

மழை பெருகி வழியும் ஓடைகள் நூறு,
சேர்ந்து வளைந்து நெளிந்து ஓடிடும் ஆறு.

அளவு மிகுந்து ஆடிட அணைகட்டி,
அடங்கிட்ட, ஆழ்ந்த அமைதியாய் நினைவு.

பெருகிட்ட கனவலைகள் ஏற்பட்டதுன்னால்,
அடைக்கமுடியவில்லை, ஆணவநிலை.

நினைவலைகள் இட்ட குஞ்சுகளாய்
நீந்திக் கணக்கும் கனவலை மீன்கள்.

கட்டி வைத்திருந்த கண்கள்,
விட்டு வைக்க முடியாத விரல்,
சுட்டு சுருண்டு விழுந்த மேனி,
பட்டுச் சிக்கிச் சிதைந்த மனம்,

ஒட்டியிருக்கும், ஊசலாடும் உயிர்,
விட்டுவிட துடித்து முடியாமல்,
வெட்டிவிடவும் வகையில்லாமல்,
கட்டிவைத்துக் காத்திருக்கும் காதல்,

சட்டையினை உரித்து, உதிர்த்து,
உடல் வெளிவந்து உலகையே
அதிரவைக்கும், உயிர் உறையவைக்கும்,
கொடியநஞ்சினைக்கொண்ட நாகம்போல்,

என்னினின் துன்பம் தொலைத்து,
எண்ணின வன்மம் புதைத்து,
இன்பம் விதைத்து, உலாவந்தது,
உன்னின் கடை விளைந்த காதல்.

இந்த நிமிடமும் எந்த இடையிலும்
நொந்த நடையிலும் இன்பமே பயக்கும்
என்னின்ப இதயராணி, இம்சையரசி,
உன்னின்ப உணர்வு விழியசைவால்.

முத்தம் ஒன்று தா

அசந்து மறந்தால் இறுக்கி,
மூச்சை அழுத்தி நெருக்கி,

உயிரை உருவி உருக்கி,
உடல் விழுங்கியுடல் பெருக்கி,

நிலைமறந்து கிறங்கி,
உறங்கி, கிடக்கும் மலைப்பாம்பு.

அது உயிர் துறத்தி
உடல் பெறுவது.

காதலி,

அன்பு முகம் இறுக்கி,
அனைத்த முத்தம் நெருக்கி,

உயிர் கலந்து உருகி
உறிஞ்ச, உடல் மருகி,

உறைந்து கிடக்கும் உயிர்
பருகி, உடல் கலப்பது.

உன் வான்மழை உதிர்த்த
கனவு, வார்த்தைத்துளி,

வழிந்ததும், என் முகம்
ஏங்கிக்கிடக்குது அடுத்ததுளி.

அண்ணாந்து நோக்குது தினம்
மறுதுளி எப்பொழுதுவருமென்று.

பொய்யுரைப்பதூவும், களவுசெய்து
கண்ணுரைப்பதூவும்

கலங்காத காவியக்
காதலில் நற்கருப்பஞ்சாரே

இதையத்தின் துடிப்பிலும்
நீ லப்பை ஒலித்தால்
எனக்கு டப்பைக் கேட்குமாறு
செய்விக்கின்றாயே.

இரவுகளின் துடிப்புகள்
மூன்றாயினும் உயிரின்
துடிப்புகள் ஊன்றி நிற்கின்றதே,
கலக்கவே துடிக்கின்றதே!

காத்திருக்க முடியாமல்
ஒடியலையும் மேகங்களைபோல,
தேடித்தேடி நுழைகின்றதே!
நட்பினுள் இன்பக்காதலினை.

கனவினில் நீந்தி நீண்டுகிடக்கும்
நம் முத்தமே முடிந்திட மறுக்கும்,

இந்நிலையில், சந்திக்கும் நிமிட
உயிர்முத்தக் காலளவு உணர்தலேப்படி?

அதன் மொத்தசுவை முடிதலேப்படி?
ஆதவனின் ஒளிவெள்ளம் நிற்பதேப்படி?

அந்தச் சுவையென்ன, இனிப்பா?
இன்பம்கொள்ள இறைதந்த மோட்சமா?

உயிர் உரசலுக்கு நடக்கும்
உதட்டுரசல், ஒத்திகையோ?

உன்னையும் என்னையும்
ஒட்டக்கொடுத்த உயிர்பசையோ?

காலம் மறந்திடக் காமன்
காட்டும் கைவரிசையோ?

கலந்த சர்க்கரை பிரியமுடியா நீரினை
நினைவுறுத்தும் சுவைபிரியா நினைவலையோ?

காதலுக்கு வாழ்த்து

வான் மழைக்காக ஏங்கி,
வானம் பார்க்கும்
வறண்ட நிலமாக
இருக்கும் நான்,

புதிதாய் என்னுள்
வேர்விட துடிக்கும் நாற்றுக்கு
எப்படி
உயிர் கொடுக்க முடியும்...?

கேட்கமட்டுமே முடியும்
இந்தக்குயிலின் கீதத்தை,

காணமட்டுமே இயலும்
இந்தமயிலின் ஆட்டத்தை,

வீசுதென்றல் தனக்கான
இன்பம் நினைத்து வீசுதலில்லை.

வானமழையும் ஒவ்வொரு
நாற்றையும் வளர்க்கப் பொழிவதில்லை.

எல்லாப்பூக்களும் கனி
கொடுத்து நிற்பதில்லை.

சில முரண்பாடுகள் இன்றி
எவருக்கும் வாழ்க்கையில்லை.

எல்லையில்லா ஆகாயம்
அளவில்லா இன்பம்
நிரந்தரம், காதல்போல்.

ஈர்த்த கடலினை கோர்த்து,
எல்லைகட்டின மேகங்கள்
உருமாறும் தரிசனம்.

அற்ப ஆயுள் கொண்ட மேகம்
சொற்ப ஒளிகொண்ட வானை
அசுத்தப்படுத்தமுடிவதில்லை.

நிலை மாற்றம் கொண்டிருக்கும்
அவை, நிறைக்கமுடிவதுமில்லை.
அதுவே காமமும் காதலினைப்போல்

உயிரே......,

உன்னை நினைத்து
உனக்காக உயிர் வாழ,
ஆயிரம் பேர் இருப்பினும்.......,
எனக்கு மகிழ்ச்சியே......,

ஏனெனில் .......,

உன்னை நினைத்தே வாழ்ந்து......,
உனக்காகவே
உயிர் விடும் ஒரே ஜீவன்.......,
நாந்தானடா என் அன்பே.!

எனக்குள்............

கரைந்தே கலந்து கிடக்கும்
உன்னை இரும்பென எங்ஙனம்
பிரித்துப் பிய்த்தெடுக்க இயலும்.
அல்லது தேய்த்துக் கொல் எறும்பென.

தேடித்தேடி தழுவவந்த
வீசுதென்றல் தவழும்போழுது
தவற விட்டுவிட்டு அனுபவிக்காமல்,
ஜன்னலைக் குறை சொல்கிறேன்.

கனிந்த காதல் களிப்புற்று
கவலைமறந்து, கைக்குழந்தை
தாயிடம் பிதற்றி கைவைக்குமே
கைகள் கண்டவிடமெல்லாம்,

அதனினைப்போல் மனம்
நினைத்தவாறெல்லாம்
தினம்தினம் உளறித்திரிகின்றேன்,
உளம்முழுதும் உனையே நினைத்து.

காதலை வாழ்த்த விரும்பினேன்,
விழைவு ஒரு இனிய முத்தமாற்றம்
ஆன்மாவினுள் கொண்டாடினது.

இனிய அந்த முத்தத்தின்
கால அளவு, உறைந்த
ஒரு மணித்துளி, உணரமுடிந்ததா?

படத்தோற்றத்தின் சொத்துக்களின்
அளவு கூடிவிட்டமையால்,
சொத்துக்குவிப்பு வழக்காகியது.

Friday, 6 April 2012

உள்ளிருப்பதே வெளியே

ஆணவமாய் ஆட்சிசெய்யும் அழகிய
ஆழித்திரை அவசரத்தையும் வென்று,

தன்னுயிர்ச் சக்தியின் துணைகொண்டு
தழுவித் தனிமைப்படுத்திப் பிரித்தெடுத்த

தேனுமாய் தேடித்தேடி உடல் நனைக்கும்
மழையுமாய் மாற்றிக்கொடுத்த ஆதவன்.

தந்துனை பற்றி எடுத்துரைத்த பயணம்.
நிலாப்பெண்ணின் சுகமாயின சயனம்.

நினைவு மறதிதான் கவிதைக்கருவுக்கு,
கருவுக்குள் நுழைந்த உயிர் உருவமாய்.

மாதம்பல காத்திருத்தல் வேண்டுமோ,
ஆதவன்பால் கொண்ட அன்பு மறைந்திட!

வட்டநிலாவை இட்டுவைத்த முகம் ,
பட்டுஇதழ்கள், பொருத்திவிட்ட பிறைகள்,

அரைவட்ட அழகில் உறையிட்ட
கறைகள், திரையிட்ட அற்புத அறைகள்.

அவிழ்ந்து ஆடின அறையுருவினை
மலர்கொண்ட, மருவினில் மயங்கினபின்,

பாதியினைக் கண்டு மீதியினை
மனதினில் கனவாக்கி உருவாக்கம்.

மிச்சமாக்கின இரவை உச்சமாக்கின
நிலையினில் உலர்ந்த உயிர்பரப்பி,

காதலின்கரு விதைத்து, உறவு
முளைத்த கருமையான இரவு.

நீர்நிலைகள் வற்றித் தவிக்கவிடும்
தாகமிகுதியினால் உருவான விக்கலல்ல.

நீர்மிகுந்து நிலைகுலைந்து
செய்வதறியாது உலாவரும் சிக்கல்.

ஆறு பெருகிடின் அணைதல் முடியுமோ?
ஊறு விளைந்திடின் மனத்திடம் பலக்குமோ?

விந்தையான வேங்கைதான்,
வீரமான அரசகுல மங்கைதான்,

இந்தப் புலி பத்துங்குதற், பாய்தற்கல்ல,
பல்பதித்து சதை கிழிப்பதற்கும் அல்ல,

பதமாகக் கதையுரைத்து ,
பஞ்சணைய மஞ்சம் சேர்ந்து,
கொஞ்சி விளையாடி,
மிஞ்சி நிற்பதற்கு.

அஞ்சமறந்து மடி கிடைத்தற்கு.

மயக்கும் மலர்த்தேன் சுவையை
உணர்ந்து தடவப்பட்டபின் நா,

மலைத்தேனி சேகரிக்கும்
தேன்கூட்டினை மட்டுமே
நினைத்துக் கிடக்கும் மனம்.

மாம்பழங்களை அள்ளித்தரத்துடிக்கும்
வளர்ந்து செழித்து உயர்ந்துநிற்கும் மா,

முக்கனியின் ஒருவனாய் உலகுணர்ந்த
பலாக்கனியினைத் தரத்துடிப்பதில்லை.

உள் ஒட்டி இருப்பிருக்கும் வினை,
விழிவழியுரைக்கும் மனம்.

தெய்வீகக் காதல்

சமூக ஒத்துழைப்பில், ஒழுங்கில்
நிறைவேற்றப்படுவது இருமனம்
கலக்க விரும்பும், திருமணம்.

சமூக அங்கீகாரம்.

விரக வேகத்தில் விரைந்து
உடலுரசலில் முடிந்தும்விடும்.
உச்சத்தில் உயிரும் உருவப்படும்.

விதியின் விளையாட்டு.

ரத்த வெள்ளையணுக்கள், உயர்ந்து
ரசம் நிறைந்த சதைப்பையினுள்
நிகழ்த்தும் சதங்கை சங்கீதம்.

இயற்கையின் தர்மம்.

ஏன், எப்படி, எதனால், என்னும்
மொழியுணர முடியாமல்
உயிரை உசுப்பிநிற்கும்.

உணவை வெறுக்கவைக்கும்,
நினைவை இழக்கவைக்கும்,
தூக்கம் மறக்கவைக்கும்

துக்கம் நிறைக்கவைக்கும்,
உடல், மனம், நினைப்பவற்றை
முகத்தினில் உரைக்கவைக்கும்.

காதலின் நிலை.

அது இறையினிலிருந்து வருவது.
உயிர் உரசலின் உச்சம்,உலகத்தால் மாற்றியமைக்க இயலாதது.

முடிவான முடிவு.

கன்னத்தில் முத்தமிட்டால்
திருப்தி அடையமுடியாதது. உரசின
உயிருடன் கலக்க முயலும் முயற்சி.

அலைபாயுதே நினைவுகளில்
கலையாகுதே கர்ம வினைகளும்,

தெவிட்டாத் தேனமுதை
திகட்டத்திகட்ட ஊட்டிவிட்டு,

தெரியாத விளையாட்டினை
புரிந்து, தெரிந்தே விரும்பிநிற்கும்.

ஆழ்ந்த காமக்கடலின் கரைதனில்
காதலலைகளை ஆடவிட்டு,

மூழ்கி மூழ்கி முத்தெடுக்க
முயன்று முயன்று தோற்கிறாய்.

அமைதியாய் இருக்கச் சொல்கிறாய்.
வானத்தை வசமாக்கவும் முயல்கிறாய்.

வந்து முளைத்த வெள்ளியை
வடிவிழந்து மறைவே செய்கின்றாய்.

என்னவேண்டும் உனக்கு
தெளிவாகவே உரைத்துவிடு.

கைகட்டி நிற்க அது மரியாதை. தந்தை.
கண்காட்டிக் கலந்துகிடப்பது அன்பு. தாய்.

கெஞ்சுவது, கொஞ்சுவது, மிஞ்சுவது
ஊடலினுள் திளைப்பது, ஊணாய் மறைவது,

அஞ்சுவது, அமைதியில் கரைவது
அன்பாய் மருவிக்கிடக்கும் காதலில்.

அன்பு செய்தலில் ஆனந்தம் விஞ்சும்
அநியாய அரவணைப்பு காதலில்.

காதல், தெய்வத்தைத் தெய்வத்தினுள்
உருகித் தரிசிக்கும் தெய்வக்கலை.

அது தங்கையில் பிடிவைத்து, கனிந்து
கவர்ந்த அக்காளை ஏறி அனுபவித்தல்.

அது ஒரு கனாக்காலம்

தடுக்கிவிழுந்ததென்னவோ 
வாழைக்காட்டினில், 

நிலைதெளிந்து பள்ளத்தாக்கினை 
பார்த்துக் கடந்தெழுந்து, 

அணை கொண்டு, நிரம்பின 
தேன்குளத்தினில் நீர்பருகி, 

மலைகளைக் கசக்கி குதித்துக் 
குமமாளமிடவே ஆசை. 

மனம் கசங்கிக் 
குழம்பின நிலையில் 
மலரையே சிதைத்திருக்கின்றே

 

கார்மேகம் இடி இடித்ததில் பயம், 
அர்ஜுனன் பேர் பத்து எனவைத்தது. 

பால்யத்தில்... 

இனிமையான, மழையினை 
இதமாக விரும்பியே நனைந்தேன். 

இளமையில்... 

குளுமையான தென்றலுக்கும் 
அடிமையாகியே கிடந்தேன். 

பருவத்தில்... 

உறைபனி பஞ்சுத்திட்டாய் 
உதிர்ந்ததில் துள்ளிக்குதித்தேன். 

மனையினில்... 

பெற்றுயிர் பிரிந்ததில் உற்றுயிர் 
உருகிநிற்க உலகம் மறந்து மலைந்தேன். 

புறம் தழுவின கரங்கள் உணர்த்தின 
அன்பினில், கரைந்தேவிட்டேன். 

மழையும்,மலையும் மனமும் கரையும், 
தினமும் தடவும் தென்றலும் உறையும். 

உன் ஒரு ஓரவிழிப் பார்வை உரசினால். 
இதழோரத் தேனின் கற்றைக் கசிவினால்.


மல்லிகைக்கொடி பந்தல் இடுகிறேன் 
பூமிப்பந்து முழுமைக்கும், என் 

ராசகுமாரனுக்கு மல்லிகையை 
மிகவும் பிடிக்கும் என்பதற்காக.. 

உலகமே இந்த மணத்தினில் 
மயங்கிக் கிறங்கிக்கிடக்கட்டும். 

இந்த மலர் மஞ்சத்திலேயே 
தவித்து உறங்கிக்கிடக்கட்டும். 

அதன் வெள்ளையுள்ள அழகிலேயே 
மறந்து மயங்கிக்கிடக்கட்டும். 

எல்லோர்க்கும் பெய்யும் மழைபோல், 
என் காதலால் உலகமே மலரட்டும். 

கற்பனைக்குத்தான் அளவில்லையே, 
கனவுகளுக்கு அடிமையான காதல். 

தாழம்பூ மணமுகர்ந்து பாடி, 
துணைதேடி வருமே நாகம். 

மயில் அறியும், ஆடிவரும் ஆணை 
அழைப்பதெப்போழுது என்பது. 

உன்னை எடுத்துக்கொள்ள கொடுத்த 
சந்தர்ப்பங்களை வீணடித்தும், 

காயங்களை இங்கு கட்டிவிட்டு 
மருந்தினை அங்கு கொட்டிவிட்ட 

இறைவனை கண்டிக்கிறேன், 
ஆசையாய் தண்டிக்கிறேன்.

Tuesday, 13 March 2012

கனவுக்காதலி

வாழைப்பூவோ என்று மலைத்துநிற்க
அப்படியில்லையென முறைத்துநின்றன
கவ்வியிழுத்த கறுத்த கண்கள்.

வளைந்த இடையின் இடைகாண
குனிந்த பார்வை பணிந்து கிடக்க,
அணிந்த ஒட்டி அவிழ்த்து வீச,

அழகிய ஓவியமாம், உச்ச மச்ச
இருப்பினைப் பார்க்க மறுத்தும்
வீசின ஒளி உள்வாங்கி விழித்தும்

ஒடிந்து ஆடிநடந்த ஒயிலாள்
தங்கத்தாம்பலம் மறைந்து
மறைத்த மயிலாள், ஓடினாள்.

கோடை மேகக்கூட்டம் மழைமுகம்
காட்டி எடுக்கும் ஓட்டம், பொய்மை.

வெம்மையின் முழுமையில் கானலை
காட்டி களிப்புறச் செய்வது பொய்மை.

கட்டாயம் வருவேன், சந்திப்பேனெனில்
நிச்சயமான ஏமாற்று விதைவிதைப்பு.

நம் மனக்கலப்பு அமாவாசை தினம்
என நிலா உறுதியிட்டால் பொய்மை.

அகக்கண் உள்வைப்பை தவிர்க்க முடியாமல்
முன்வைக்குமாம் முத்தழகியின் முகக்கண்.

பூவையர் எப்பொழுதும் தம்தம்
மலர்முகம் காட்டி வீழ்வதில்லை.

பொய்மையின் வித்தகர்கள், அவர்களின்
கவிதைமுகத்தில் உண்மையுமுண்டு.

பொய்யில் ஆண் பெண்னெனில்
தவறேயில்லை காண். அக்தே

கைபிடித்து பின் மனமுடைக்கும்
பாவம், பின் வந்தேயடையும் முகம்தேடி.

நிலாப்பெண்ணே!
மோகனம் பாடிவரும் கானகக்குயிலே!
வண்ணமுகத் தாமரை மின்னிவரும்,
புன்னகை ஜொலிக்கும் பிறைநிலவே!

முத்து விளையாடும் களமொத்தக்
கொங்கைகள்,அத்துத்தெரித்த
வெண்முல்லை ஆடிமகிழ்ந்து
அணிவகுத்த பூரணநிலா!

மூடிச் சிரிக்கும் பிறையிலும்,
ஆடிச் சரிக்கும் பூரணமும்,
தேடிக்கிடைக்காத நடையினில்
குழுங்கிக்கவிழும் அழகிலும்
வெற்றிதான் உனக்கு முழுநிலவே!

முன்வந்து ஒயிலாக மனக்கதவினை
விரைந்து வந்து திறந்து நிற்கமாட்டாயோ?

Friday, 20 January 2012

மாறிவிடுகிறேன் அன்பிற்காக


விலையாகிப்போன தென்றல்
வினையாகிப்போன காவியக்காதல்,

விளையாடித் துயிலும் வஞ்சம்,
விழித்துக்கிடக்கும் மலர் மஞ்சம்,

கொசுவின் இலவச மருத்துவ உதவி,
இணைய மறுக்கும் நினைவு உறவு,

தொலைத்த நித்திரையின் கடை ஓர
விழித்திரையில் வீணாய்ப்போன விண்மீன்கள்.

நட்டநடுவினில் வட்டநிலா, உடல்
பட்டஇடமெங்கும் ஒலியால் சுட்டநிலா.

சித்திரத்தின் வன்மை வக்கிரத்தால்
சிறியதாய்க் குத்தின வலி முத்திரைகள்.

இவைகள்தாம் இன்றைய நிலையின்
குன்றிய இரவின் பனிபடர்ந்த பயணப்பாதை.

 சேலையின் கட்டின விதம் உன்னுடலுக்கு 

அழகாக பொருந்தி இருந்ததினால்,

அழகில்லாத அதன் நிறமும், வடிவமைப்பும்
வெளித்தோன்ற முடியவில்லை.

சிதறின உன் ஒற்றைச் சிரிப்பினில்
சிதைந்து போயின என் சிந்தனைகள்.

வானமகள் நாணிப் பூனிய மேகஉடை
சிரித்ததில் சிதறிய சில்லென்ற மழை.

வெளிவந்த வார்த்தைகளை வீசியெறியும்
வெந்துநொந்த பைத்தியம்போல்

வந்து விழுந்த கவிதைகள் வழுக்கி,
வீழ்ந்துகிடக்கிறேன் வழியறியமுடியாமல்.

முதுகினில் குத்திநிற்கின்றாயா, இல்லை
முகம்புதைத்து முத்தம் பதிக்கின்றாயா,

புரியவே முடியவில்லை உன்பாதை,
என் மழுங்கிய மூளைக்கு எட்டினவரை.

 நட்பின் இலக்கணம் புரியாதவர்களிடமே, 

நட்பு பாராட்டியிருந்திருக்கின்றேன்.

அதனாலேயே காதல் உருவான உன்மேல்
நட்பினை உணர முன்வரவில்லை.

இது ஒரு அறிவுறுத்தலா? இல்லை,
உண்மை நினைவுறுத்தலா? புரியவில்லை.

ஆனாலும் எதையுமே எதிர்பார்க்காத
என்மனம் நட்பினையும் ஆராதிக்கின்றது.

மொத்தத்தில், கொடுக்கப்பட்ட பரிசு,
அன்பினை மையமாக்கி நிற்பதினால்,

ஏற்றுக்கொள்கிறேன் பிரித்துணரமுடியா
காதலை வீழ்த்திவிடுகிறேன் விண்ணைவிட்டே! 

கொடுமையானதோ காதல்


ஏதோ உன்னில் நான் எதிர்பார்க்கிறேன்,
என்பதுமட்டும் பிரிந்து தெரிகிறது.

ஆனாலும் அறுதியிட்டு உணரவில்லை,
அந்தி பொழுது அசைந்தாடி சாயும்வரை.

தினமும் உன் வலைப்பக்கங்களினுள்
வந்து சென்றுகொண்டே இருக்கிறேன்,

சரியான காரணம் அறியாமலே, புரியாமலே,
ஒவ்வொரு நாளும் உதிக்கும் ஆதவன்போல்.

சூரியனின் நியமப்பாதையினை
மாற்றிட யாருக்கும் உரிமையில்லை.

என்ன நேர்ந்தது என் நிஜங்களுக்கு,
துருப்பிடித்துக் குழப்பிய நிகழ்காலம்.

போகவேண்டிய இடம் தெரியாமல்
புலம்பெயர்ந்த செல்லும் விண் கற்கள்போல,

பயணம் இனிமையானதுதான் ஆனாலும்
புரியமுடியாத புதிராய் இலக்கு இல்லாமல்.

ஒருவேளை உன் எழுத்தின் படைப்புகளை
ஒவ்வொருநாளும் ஏங்கிக்கிடக்கிறதோ?

இத்தனைக் கொடுமையானதோ
என்மீது நீகொண்ட இனியகாதல்?

 உன்னையே முழுநேரமும் சுற்றினேன். 

உன் நினைவுகளிலேயே மூழ்கினேன்.

களைப்பாய் தவிக்கும் மனம்
தூக்கமிழந்த கண்களின் தவிப்பு.

ஆனாலும்

முதுகில் குத்தியிருக்கவேண்டாம்,
முகத்தில் அடித்திருந்திருக்கலாம்.

இரவினைப் பகலாக்கிவிட்டும்
பகலினை இரவாக்கிவிட்டும்,

அப்படியென்ன வேண்டும் உனக்கு,
என் முகத்தினில் கரி பூசுவதினைத்தவிர.

 விழி நனைந்த கவிதைப் பக்கம் 

விளையாட இங்கு துணையில்லை.

சுகம்நிறைந்த ஆன்மாவின் அகமாக,
பஞ்சினால் நெய்யப்பட்ட துணியில்

கனிந்த காதல் நூல்கொண்டு
நீ தைத்துக்கொடுத்த ஆடையின்

அளவு மாறிவிட்டபடியால்
அணியமுடியாமல் ஆகிவிட்டது.

முதல் பின்னல் இறுகி முடிந்ததால்
இணைந்த இணைப்பை முனைந்து,

பிரித்துத்தைக்கவும் முடியாமல்
விட்டுஎரியவும் வழியில்லாமல்

செய்வதறியாது திகைத்து நிற்கிறேன்
தொட்டுவிடத் துடிக்கும் வானம்போல். 

காதல்பரிசு எங்கே?


தங்குதடையின்றி தொடுக்கப்பட்ட
என் உன்மீதான கேள்விக்கணைகள்,

வந்துநின்றபின் உன் அழகிலும்
அரவணைத்த அன்பிலும் மயங்கி, மதிமறந்து

பதில் பெறமுடியாமலே உணராமுடியாமலே
உன் காலடியில் வீழ்ந்துவிட்டதுபோலும்.

காத்திருந்து காத்திருந்து கவனம் சிதைந்து
விழி வழுவிழந்து நிலைமறந்து கிடக்கிறேன்.

கள்ளம் நிறைந்து, பள்ளம் விழுந்து,
லஞ்சம்ஏறி, துருவேறின தங்கமாய்

மூடுபனி வெண்கூந்தல் பெற்று
வாடிநிற்கும் பாரதமாதாவைப் போல,

செய்வதறியாது திகைத்து நிற்கிறேன்.
புதுவருடமாம் 2012 கண்திறக்குமா, பார்ப்போம்.

 கடந்துசென்ற காலப் பாதையினைத் 

திரும்பிப்பார்க்கலாம், திருத்திக்கொள்ளலாம்.

ஆயினும் மறுபடியும் மகிழ்வுடன்
அதில் நீந்திக்கிடக்க முடிந்ததில்லை.

உறவுக் கிணற்றில் வீழ்தல் எண்ணி,
காதல்க் கடலினுள் கவிழ்ந்து கிடக்கின்றேன்.

உடல் உயிர் கொள்ளல் எனல்,
ஒரு ஒருங்கிணைந்த காந்தக்குவியல்.

உன்மீது கொண்ட காதல் தனல்,
குறிப்பது உயிர்ப்புடன் இருத்தலை.

பருவமடைந்த பட்டுப்புழு எச்சியினைக்
கொண்டு தனக்குள்ளேயே அழகிய,

கூடமைத்துக்கொண்டு சுகமாய்,
இறைவேண்டி யாகம் செய்திடல்போல்,

நம்மைச் சுற்றி அமைந்துகொண்ட
காதல் கூடு சுகமாயே நம்மைக் காக்கின்றது.

இருப்புநிலையே அழகிய கருமை,
அதுவே வெளித்தள்ளிய வெண்மை,

சூரியத்தேர் பூட்டப்பட்ட ஏழுகுதிரைகள்,
வெண்மை பிரித்த நிறமாலை நிறங்கள்.

ஒன்பது நிறங்களையும், நவருசிகளையும்,
நவரசங்களையும் தனக்குள் பூசிநிற்கும்

நவமணியே, கோபவசனக் கற்றைகள்,
விழிவழி காமப்பார்வை வித்தைகள்,

தாங்கமுடியவில்லை, தணியாத
காதல்தாகத்தால் ஏங்கமுடியவில்லை.

பரிசுப்பொருள் அறியஎண்ணி. 

காதல் உண்மைவடிவானது


கோடானுகோடி சூரியன்கள் நினைப்பினும்
இருட்டினை ஒழித்துவிட முடிவதில்லை.

இருட்டு, இந்த நிலையான மொத்தத்திற்கும்
மறைக்கமுடியாத நிதர்சன நிரந்தரம்.

ஓராயிரம் காதல்கனைகள் எறியப்பட்டாலும்
மனம் ஒப்பி ஒளிந்துகிடப்பது ஒர்காதல் மட்டுமே.

உண்மைக் காதல் ஒருதலையாயினும்
இத் தருதலையின் மனம் மருதழிவதில்லை.

மலர்ந்து நிற்கும் மலர் வாடமுடியுமே தவிர
மலர்ந்தபின் மறுத்துநிற்க அனுமதியில்லை.

காதல் வந்த அரிச்சுவடு புரிவதில்லை,
அணைந்தபின் அமைதி திரும்புவதில்லை.

பால்யத்தில் ஆடியதென்ன, பாடியதென்ன,
தலைவணங்காமல் தறிகெட்டு ஓடியதென்ன,

துள்ளிவரும் புள்ளிமேவா மான்களுடன்
கிள்ளியாடும் துணிந்த இளமை துள்ளலென்ன,

தனிமையும் இனிமையாய், தவழ்ந்து
தவறிவிழும் தண்ணீர் தோகையும் குளுமையாய்,

காதலின் தூசு கண்களில் ஒட்டும்முன்
கபடமில்லா, கவலையில்லா வாழ்க்கை.

பனி உமிழ்ந்த முத்தரசம் முத்தாகிபோய்,
கழுத்து மாலையில் முகவரியின்றித் தவிக்க,

உள் விழுந்த உன் ஒரு விழிப்பார்வை
ஓராயிரம் இன்பக் காதலைச் சுமந்துநிற்க,

மங்கைமடி வீழ்ந்தவன் எழமுடியவில்லை,
மறுபடியும் மறுபடியும் இரைந்து கிடக்கிறேன் 

Wednesday, 14 December 2011

காத்திருக்கும் வார்த்தைகள்

பாடிநின்ற உன்னைத் தேடியலைந்து
வாடிநின்று உருண்டு வழிந்த வியர்வையை,

நிலம் சேருமுன் தடவித் துடைத்துச் சென்ற,                                                   தென்றலின் முகவரியினைத் தேடியலைகிறேன். 


சோகத்தில் சுகம் பாடித் திரிந்தவேளை,
சுத்த சுர இசையினால் மனம் வருடி,

மருந்திட்டுச் சென்ற மாங்குயிலின்,
மரம்நின்ற திசை நோக்கி வாடி நிற்கிறேன்.

அது ஒரு மயிலா? மாமரத்துக் கிளியா?
மணம் நிறைந்த மயக்கும் மல்லிகையா?

மனமில்லாமல் சேரத்துடிக்கும்
மஞ்சள் வெயில் மாலைநேரத்து மங்கையா?

வார்த்தைகளனைத்தையும் உருவிவிட்டு
வானம் பார்த்துக்கிடக்கும் வானவில்லா?

என்னிடம் வந்தால் கொண்டுவருவதென்ன?
உன்னிடம் வந்தால் கொடுப்பதென்ன?

என்று மருவிக்கிடக்கும் கஞ்சன்போல்,
வஞ்சம் செய்து நிற்கிறாயே பதில்சொல்.

நின்ற இடத்தில் நிலைகுத்தியே நின்று,
நிமிர்ந்து நோக்கும் தினவும் இன்றி,

நிலையிழந்து தவிக்கும் மனம்,
நிலைகொள்ளச் செய்யும் வழிஎப்படி?

பேசுவதெல்லாம் உண்மையைமட்டுமே,
என்றொரு வறட்டு உறுதிமொழி.

மௌனம் களைந்து மந்திர வார்த்தைகொண்டு,
பதில்மொழி உதிர்ப்பதேப்போழுது?

கலைந்து நொறுங்கிக் கிடக்கும் இதயம்
துடிப்பை நிறுத்துமுன் சேவிக்கவருவாயா?

காதலின் துடிப்பு

வைகைக்கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பாத்தா சொல்லு.

மிஞ்சிநின்ற பஞ்சு நெஞ்சம்தனை
கெஞ்சி கெஞ்சித் தொலைத்தேவிட்டேன்.

அஞ்சி அஞ்சி மயங்கி மறைந்தேநின்று
தஞ்சம் கொள்ள மறந்தேவிட்டேன்.

கார்மேகம்தனையே கண்ட மயில்,
தொகைதனையே விரித்தாடக்கண்டு,

வான் அளந்த உறவாம் வான்கோழி
வாடிநிற்குதே தன் வடிவழகை கண்டு.

குரல் மாறிக் கூவும் குஞ்சிக் குயிலினை
கூட்டிலிருந்து விரட்டி நிற்குமே காக்கை,

கொண்ட அன்பினை கொன்று சிதைத்து,
கண்ட பொழுதெல்லாம் ஏங்கும் குயிலை.

கண்டு கண்டு வெம்பித்துடித்தே
விம்மிவிம்மி வாடிநிற்கும் என்மனம்,

தேடிய மணம், மல்லிகையிலும் இல்லை,
கூடிய காதல், கொண்டவளிலும் இல்லை,

பாடிய குரல் இதமாய், இன்பமாய் கேட்குதடி
ஆடிய தென்றல் ஏற்றிவிட்ட காதலியிடம்.

கார்குழலி உன் அன்பையும் கண்டேன்
கன்னம்குழியும் உன் சிரிப்பையும் வென்றேன்.

சின்னச் சின்ன உன் முகச் சுழிப்பையும்
சிதறிக்கிடக்கும் உன் சிந்தனையையும்,

சிங்காரமாய் சித்தரிக்கும் சிகப்பழகாம் உன 

செவ்விதழையும் சேரவே துடிக்கும் என்மனம்.

அனுமதி மறுப்பதேனோ

கூட்டுக்குள் துணை தேவையில்லை.
வாட்டும் துன்பமும் இங்குயில்லை.

பாட்டுக் குயில்கள் கூவிக்களித்திட,
கூடித்திரிந்திட கட்டுப்பாடு எங்கும் இல்லை.

தோட்டத்து மலர்கள் மலர்ந்து சிரித்திட
மணம்பரப்பி கலந்திட மறுப்பதுமில்லை.

தொட்டுவிட்ட தென்றலும் தொடுசுகம்
வேண்டிவந்து தடவித் தழுவுவதுமில்லை.

சொட்டிவிடும் மழைக்கும் முகவரி
கண்டு பொழிந்திடும் அவசியமில்லை.

வட்டமிடும் வண்டுகள் பூவினுள் வீழ்ந்து,
தேன்குடித்திட அனுமதி வேண்டுவதில்லை.

காட்டு மான்கள் காலாற குதித்து நடந்திட
வீட்டு வெளியில் விண்ணப்பமிடுவதில்லை.

சுட்டுவிரல் எனைநோக்கிக் காட்டிட்ட,
சுகராகம் எனக்குள் சுந்தரமாய் பாடிட்ட

கட்டிக்கரும்பே, கனியமுதே, கண்மணியே,
கலையாத கொடிமுல்லையே, காதலியே,

வெட்டிச்செதுக்கின சிலையே, மனக்கூட்டினுள்
நுழைய என்னை மட்டும் அனுமதி மறுப்பதேனோ?

Tuesday, 6 December 2011

கண்டேன் என் காதலை

இசைந்த முத்தச்சுமை, சிந்திவிடாமல்
சேகரித்த சுவை மூளையில் கலக்க,

உதடு உரசி உதிர்ந்த உயிரினை
உலையிலிட்டு உளுப்பினாய்.

சித்தம் கலங்கி, சிலையினுள் சிணுங்கித்
தவித்து, சித்திரத்தில் மைஎழுதி,

சின்னதாய் விம்மிக் குதித்து
மொத்த சுகத்தையும் பூசினாய்.

புதியதாய் ஒரு புன்னகை,
விழிதனில் புது மின்னல் கீற்று.

புல்வெளியின் சுதந்திரப் பனிக்காற்று
படுத்த புழுதியிலும் புது ஆனந்தம்

முத்தச் சாறு சுவைத்து எடுத்து
பித்தச் சாறு பிழிந்து  கொடுத்து

சகதியிலும் ஒரு புரட்டல்,
வானத்திலும் பறந்து ஒரு வட்டம்.

என்ன ஆயிற்று இவனுக்கு
கற்பனையில் காற்றாடும் மனம்.

காதலியைக் கண்டபொழுது
கூத்தாடும், கூண்டினுள் உயிர்.

வந்ததென்னவோ தாயின்
கர்ப்ப கிரகத்திலிருந்துதான்.

வாழ்வதென்னவோ உந்தன்
மையிட்ட காந்தக் கண்களுக்குள்தான்.

ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நானறிவேன்.

பிரித்துத் தெறித்த ஒரு வார்த்தையின் வீச்சில்
உன் காதலின் முழுவீச்சையும் உணர்வேன்.

நடையழகின் இடை நடனத்தினில்
மறைந்து கிடக்கும் மனமகிழ்ச்சியும்

பூத்துக்கிடக்கும் புன்னகையின் ஓரத்தில்
புயலாய் புழுங்கிக்கிடக்கும் காமமறிவேன்.

அனலாய் கொதித்துக்கிடக்கும் உடல்மொழி
உணர்த்திடும், எறிந்து நிற்கும் பெருமூச்சு.

கவிழ்ந்து கிடக்கும் உன் நிலவுமுகம்
மறைத்திடும், மலையென எழுந்து

நிமிர்கையில் கோபத்தனல் வீசிநிற்கும்,
விச்சின் பதில் உணர்த்தாத கண்களுக்கு.

கொஞ்சம் காதல்கோபம்

சின்ன சின்ன கண்ணிலே
வண்ண வண்ண ஓவியம்,

பின்னலிட்ட உன் கூந்தலில்
அள்ளிவைத்த மல்லிகை,

ஊஞ்சலிட்டு ஆடையில்
ஆடைதொட்டு வாசம் பாடுது.

பாட்டு வந்து கூடையில் சுவாசம்,
வந்து கூடுவிட்டு கூடு பாயுது.

வந்து நின்ற தென்றலை
உண்டுநின்ற நாசி, மயங்கிநிக்கிது.

உலை கொதித்து நின்று
ஒன்று கூட ஏங்கி பாக்குது.

கோபப்பார்வை வீசினால்
வீச்சுவார்த்தை பேசினால்,

காத்துக் கிடக்கும் காதல்
எங்குசென்று வென்று மீள்வது.

கருணை கொஞ்சம் காட்டம்மா
காலைக் கொஞ்சம் நீட்டம்மா,

மடிசாய்ந்து மயங்கச் செய்யம்மா,
மந்திரத்தை எடுத்து வீசம்மா!


நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்,
நெருப்பாய் சுடுகிறதே.

வான்தெருவினில் வட்டமிட்டால்
வஞ்சகர் கண்களும் கண்ணடிக்கும்.

உன் குளிர்முகம் மலரவிட்டால்
காதலும், கனியும் காமனுக்குள்ளே.

அல்லது மேகச் சேலையை
உடுத்திநில், மறைத்துக்கொள்

உன்னழகை முன்னழகை
பின்னழகை, தேய்ந்து நீட்டாதே.

கொடிமுல்லை வாடிநிற்கும்
செடிமல்லி மாய்ந்துநிற்கும்.

வடிவழகி, அன்ன நடையழகி உன்
வரைந்த வட்டஉடல் கடையிழந்தால்.

வீதிக்கு வந்த பொருள்
விருந்தாகியே போகும் விழிகளுக்கு.

இழப்பு ஏதுமில்லை முகம் காட்டிநிற்க,
முகவரியை மாற்றி நிற்காதே.

ஒருநாளும் முழுமதியே உன்னால்
சுட்டெரிக்கும் சூரியனாக முடியாது.