Friday, 20 January 2012

கொடுமையானதோ காதல்


ஏதோ உன்னில் நான் எதிர்பார்க்கிறேன்,
என்பதுமட்டும் பிரிந்து தெரிகிறது.

ஆனாலும் அறுதியிட்டு உணரவில்லை,
அந்தி பொழுது அசைந்தாடி சாயும்வரை.

தினமும் உன் வலைப்பக்கங்களினுள்
வந்து சென்றுகொண்டே இருக்கிறேன்,

சரியான காரணம் அறியாமலே, புரியாமலே,
ஒவ்வொரு நாளும் உதிக்கும் ஆதவன்போல்.

சூரியனின் நியமப்பாதையினை
மாற்றிட யாருக்கும் உரிமையில்லை.

என்ன நேர்ந்தது என் நிஜங்களுக்கு,
துருப்பிடித்துக் குழப்பிய நிகழ்காலம்.

போகவேண்டிய இடம் தெரியாமல்
புலம்பெயர்ந்த செல்லும் விண் கற்கள்போல,

பயணம் இனிமையானதுதான் ஆனாலும்
புரியமுடியாத புதிராய் இலக்கு இல்லாமல்.

ஒருவேளை உன் எழுத்தின் படைப்புகளை
ஒவ்வொருநாளும் ஏங்கிக்கிடக்கிறதோ?

இத்தனைக் கொடுமையானதோ
என்மீது நீகொண்ட இனியகாதல்?

 உன்னையே முழுநேரமும் சுற்றினேன். 

உன் நினைவுகளிலேயே மூழ்கினேன்.

களைப்பாய் தவிக்கும் மனம்
தூக்கமிழந்த கண்களின் தவிப்பு.

ஆனாலும்

முதுகில் குத்தியிருக்கவேண்டாம்,
முகத்தில் அடித்திருந்திருக்கலாம்.

இரவினைப் பகலாக்கிவிட்டும்
பகலினை இரவாக்கிவிட்டும்,

அப்படியென்ன வேண்டும் உனக்கு,
என் முகத்தினில் கரி பூசுவதினைத்தவிர.

 விழி நனைந்த கவிதைப் பக்கம் 

விளையாட இங்கு துணையில்லை.

சுகம்நிறைந்த ஆன்மாவின் அகமாக,
பஞ்சினால் நெய்யப்பட்ட துணியில்

கனிந்த காதல் நூல்கொண்டு
நீ தைத்துக்கொடுத்த ஆடையின்

அளவு மாறிவிட்டபடியால்
அணியமுடியாமல் ஆகிவிட்டது.

முதல் பின்னல் இறுகி முடிந்ததால்
இணைந்த இணைப்பை முனைந்து,

பிரித்துத்தைக்கவும் முடியாமல்
விட்டுஎரியவும் வழியில்லாமல்

செய்வதறியாது திகைத்து நிற்கிறேன்
தொட்டுவிடத் துடிக்கும் வானம்போல். 

No comments:

Post a Comment