Friday, 20 January 2012

மாறிவிடுகிறேன் அன்பிற்காக


விலையாகிப்போன தென்றல்
வினையாகிப்போன காவியக்காதல்,

விளையாடித் துயிலும் வஞ்சம்,
விழித்துக்கிடக்கும் மலர் மஞ்சம்,

கொசுவின் இலவச மருத்துவ உதவி,
இணைய மறுக்கும் நினைவு உறவு,

தொலைத்த நித்திரையின் கடை ஓர
விழித்திரையில் வீணாய்ப்போன விண்மீன்கள்.

நட்டநடுவினில் வட்டநிலா, உடல்
பட்டஇடமெங்கும் ஒலியால் சுட்டநிலா.

சித்திரத்தின் வன்மை வக்கிரத்தால்
சிறியதாய்க் குத்தின வலி முத்திரைகள்.

இவைகள்தாம் இன்றைய நிலையின்
குன்றிய இரவின் பனிபடர்ந்த பயணப்பாதை.

 சேலையின் கட்டின விதம் உன்னுடலுக்கு 

அழகாக பொருந்தி இருந்ததினால்,

அழகில்லாத அதன் நிறமும், வடிவமைப்பும்
வெளித்தோன்ற முடியவில்லை.

சிதறின உன் ஒற்றைச் சிரிப்பினில்
சிதைந்து போயின என் சிந்தனைகள்.

வானமகள் நாணிப் பூனிய மேகஉடை
சிரித்ததில் சிதறிய சில்லென்ற மழை.

வெளிவந்த வார்த்தைகளை வீசியெறியும்
வெந்துநொந்த பைத்தியம்போல்

வந்து விழுந்த கவிதைகள் வழுக்கி,
வீழ்ந்துகிடக்கிறேன் வழியறியமுடியாமல்.

முதுகினில் குத்திநிற்கின்றாயா, இல்லை
முகம்புதைத்து முத்தம் பதிக்கின்றாயா,

புரியவே முடியவில்லை உன்பாதை,
என் மழுங்கிய மூளைக்கு எட்டினவரை.

 நட்பின் இலக்கணம் புரியாதவர்களிடமே, 

நட்பு பாராட்டியிருந்திருக்கின்றேன்.

அதனாலேயே காதல் உருவான உன்மேல்
நட்பினை உணர முன்வரவில்லை.

இது ஒரு அறிவுறுத்தலா? இல்லை,
உண்மை நினைவுறுத்தலா? புரியவில்லை.

ஆனாலும் எதையுமே எதிர்பார்க்காத
என்மனம் நட்பினையும் ஆராதிக்கின்றது.

மொத்தத்தில், கொடுக்கப்பட்ட பரிசு,
அன்பினை மையமாக்கி நிற்பதினால்,

ஏற்றுக்கொள்கிறேன் பிரித்துணரமுடியா
காதலை வீழ்த்திவிடுகிறேன் விண்ணைவிட்டே! 

No comments:

Post a Comment