Saturday, 29 October 2011

கலைமகள் விலைமகளாய்

பள்ளிக்குச் சென்றுள்ள குழந்தைக்கு
இன்றைய உணவும், உடையும் வேண்டும்.

கையாலாகாத கணவனுக்கு
கைக்காசு வேண்டும் டாஸ்மாக் செல்ல.

கூட்டிக் கழித்தால் எப்படியும்
இந்த மாதத் தேவை மூன்று ஆயிரங்கள்.

வழியில்லை கரைந்துவிட்டிருந்தது
மெலிந்து சுருங்கிய சேலைமுடி.

அலைபேசியில் மெல்லப்பேசி பேரம்பேசி,
நிலைகுறித்து நேரமும் குறித்துவிட்டாள்.

வந்தவன் சொத்துக்களை ஆராய்ந்தான்,
செத்துவிழுந்தான் ஒரு துளி விலக்கத்தில்.

வாழ்க்கைக்கு ஆதாரம் தரவேண்டிய அரசு,
கையாலாகாத பிழைப்புதானோ அதற்கும்.

வருமான வரிவரம்பு பதினைந்தாயிரமாம்,
நகைப்புத்தான் என் மூவாயிரத்தின் வாழ்வு.

பலருக்கும் இதுதானோ நிலை,
அரசன் இருந்தாலென்ன செத்தாலென்ன?

நிலைமாறுமோ இந்த உலைகொதிக்க,
நித்தமும் வணங்குகிறேன் நிம்மதிக்காக.

கருணைக்கண்ணை திருப்பி நிற்கும் கடவுள்
அதிகமாய் சோதனை செய்துவிட்டான் என்னை.

கோடிகளைக் கொள்ளை கொண்டோர் கொஞ்சம்
சிந்திக்கட்டும், கொண்டுபோவது ஏதுமில்லை.

No comments:

Post a Comment