Wednesday, 21 December 2011
என்று கனியும் இந்தக் காதல்
மின்சாரம் தொட்டதும் பட்டென
கூட்டுக்குள் துணை தேவையில்லை.
வைகைக்கரை காற்றே நில்லு
Wednesday, 14 December 2011
காத்திருக்கும் வார்த்தைகள்
பாடிநின்ற உன்னைத் தேடியலைந்து
வாடிநின்று உருண்டு வழிந்த வியர்வையை,
நிலம் சேருமுன் தடவித் துடைத்துச் சென்ற, தென்றலின் முகவரியினைத் தேடியலைகிறேன்.
சோகத்தில் சுகம் பாடித் திரிந்தவேளை,
சுத்த சுர இசையினால் மனம் வருடி,
மருந்திட்டுச் சென்ற மாங்குயிலின்,
மரம்நின்ற திசை நோக்கி வாடி நிற்கிறேன்.
அது ஒரு மயிலா? மாமரத்துக் கிளியா?
மணம் நிறைந்த மயக்கும் மல்லிகையா?
மனமில்லாமல் சேரத்துடிக்கும்
மஞ்சள் வெயில் மாலைநேரத்து மங்கையா?
வார்த்தைகளனைத்தையும் உருவிவிட்டு
வானம் பார்த்துக்கிடக்கும் வானவில்லா?
என்னிடம் வந்தால் கொண்டுவருவதென்ன?
உன்னிடம் வந்தால் கொடுப்பதென்ன?
என்று மருவிக்கிடக்கும் கஞ்சன்போல்,
வஞ்சம் செய்து நிற்கிறாயே பதில்சொல்.
நின்ற இடத்தில் நிலைகுத்தியே நின்று,
நிமிர்ந்து நோக்கும் தினவும் இன்றி,
நிலையிழந்து தவிக்கும் மனம்,
நிலைகொள்ளச் செய்யும் வழிஎப்படி?
பேசுவதெல்லாம் உண்மையைமட்டுமே,
என்றொரு வறட்டு உறுதிமொழி.
மௌனம் களைந்து மந்திர வார்த்தைகொண்டு,
பதில்மொழி உதிர்ப்பதேப்போழுது?
கலைந்து நொறுங்கிக் கிடக்கும் இதயம்
துடிப்பை நிறுத்துமுன் சேவிக்கவருவாயா?
காதலின் துடிப்பு
வைகைக்கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பாத்தா சொல்லு.
மிஞ்சிநின்ற பஞ்சு நெஞ்சம்தனை
கெஞ்சி கெஞ்சித் தொலைத்தேவிட்டேன்.
அஞ்சி அஞ்சி மயங்கி மறைந்தேநின்று
தஞ்சம் கொள்ள மறந்தேவிட்டேன்.
கார்மேகம்தனையே கண்ட மயில்,
தொகைதனையே விரித்தாடக்கண்டு,
வான் அளந்த உறவாம் வான்கோழி
வாடிநிற்குதே தன் வடிவழகை கண்டு.
குரல் மாறிக் கூவும் குஞ்சிக் குயிலினை
கூட்டிலிருந்து விரட்டி நிற்குமே காக்கை,
கொண்ட அன்பினை கொன்று சிதைத்து,
கண்ட பொழுதெல்லாம் ஏங்கும் குயிலை.
கண்டு கண்டு வெம்பித்துடித்தே
விம்மிவிம்மி வாடிநிற்கும் என்மனம்,
தேடிய மணம், மல்லிகையிலும் இல்லை,
கூடிய காதல், கொண்டவளிலும் இல்லை,
பாடிய குரல் இதமாய், இன்பமாய் கேட்குதடி
ஆடிய தென்றல் ஏற்றிவிட்ட காதலியிடம்.
கார்குழலி உன் அன்பையும் கண்டேன்
கன்னம்குழியும் உன் சிரிப்பையும் வென்றேன்.
சின்னச் சின்ன உன் முகச் சுழிப்பையும்
சிதறிக்கிடக்கும் உன் சிந்தனையையும்,
சிங்காரமாய் சித்தரிக்கும் சிகப்பழகாம் உன
செவ்விதழையும் சேரவே துடிக்கும் என்மனம்.
அனுமதி மறுப்பதேனோ
கூட்டுக்குள் துணை தேவையில்லை.
வாட்டும் துன்பமும் இங்குயில்லை.
பாட்டுக் குயில்கள் கூவிக்களித்திட,
கூடித்திரிந்திட கட்டுப்பாடு எங்கும் இல்லை.
தோட்டத்து மலர்கள் மலர்ந்து சிரித்திட
மணம்பரப்பி கலந்திட மறுப்பதுமில்லை.
தொட்டுவிட்ட தென்றலும் தொடுசுகம்
வேண்டிவந்து தடவித் தழுவுவதுமில்லை.
சொட்டிவிடும் மழைக்கும் முகவரி
கண்டு பொழிந்திடும் அவசியமில்லை.
வட்டமிடும் வண்டுகள் பூவினுள் வீழ்ந்து,
தேன்குடித்திட அனுமதி வேண்டுவதில்லை.
காட்டு மான்கள் காலாற குதித்து நடந்திட
வீட்டு வெளியில் விண்ணப்பமிடுவதில்லை.
சுட்டுவிரல் எனைநோக்கிக் காட்டிட்ட,
சுகராகம் எனக்குள் சுந்தரமாய் பாடிட்ட
கட்டிக்கரும்பே, கனியமுதே, கண்மணியே,
கலையாத கொடிமுல்லையே, காதலியே,
வெட்டிச்செதுக்கின சிலையே, மனக்கூட்டினுள்
நுழைய என்னை மட்டும் அனுமதி மறுப்பதேனோ?
Tuesday, 6 December 2011
கண்டேன் என் காதலை
இசைந்த முத்தச்சுமை, சிந்திவிடாமல்
சேகரித்த சுவை மூளையில் கலக்க,
உதடு உரசி உதிர்ந்த உயிரினை
உலையிலிட்டு உளுப்பினாய்.
சித்தம் கலங்கி, சிலையினுள் சிணுங்கித்
தவித்து, சித்திரத்தில் மைஎழுதி,
சின்னதாய் விம்மிக் குதித்து
மொத்த சுகத்தையும் பூசினாய்.
புதியதாய் ஒரு புன்னகை,
விழிதனில் புது மின்னல் கீற்று.
புல்வெளியின் சுதந்திரப் பனிக்காற்று
படுத்த புழுதியிலும் புது ஆனந்தம்
முத்தச் சாறு சுவைத்து எடுத்து
பித்தச் சாறு பிழிந்து கொடுத்து
சகதியிலும் ஒரு புரட்டல்,
வானத்திலும் பறந்து ஒரு வட்டம்.
என்ன ஆயிற்று இவனுக்கு
கற்பனையில் காற்றாடும் மனம்.
காதலியைக் கண்டபொழுது
கூத்தாடும், கூண்டினுள் உயிர்.
வந்ததென்னவோ தாயின்
கர்ப்ப கிரகத்திலிருந்துதான்.
வாழ்வதென்னவோ உந்தன்
மையிட்ட காந்தக் கண்களுக்குள்தான்.
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நானறிவேன்.
பிரித்துத் தெறித்த ஒரு வார்த்தையின் வீச்சில்
உன் காதலின் முழுவீச்சையும் உணர்வேன்.
நடையழகின் இடை நடனத்தினில்
மறைந்து கிடக்கும் மனமகிழ்ச்சியும்
பூத்துக்கிடக்கும் புன்னகையின் ஓரத்தில்
புயலாய் புழுங்கிக்கிடக்கும் காமமறிவேன்.
அனலாய் கொதித்துக்கிடக்கும் உடல்மொழி
உணர்த்திடும், எறிந்து நிற்கும் பெருமூச்சு.
கவிழ்ந்து கிடக்கும் உன் நிலவுமுகம்
மறைத்திடும், மலையென எழுந்து
நிமிர்கையில் கோபத்தனல் வீசிநிற்கும்,
விச்சின் பதில் உணர்த்தாத கண்களுக்கு.
கொஞ்சம் காதல்கோபம்
சின்ன சின்ன கண்ணிலே
வண்ண வண்ண ஓவியம்,
பின்னலிட்ட உன் கூந்தலில்
அள்ளிவைத்த மல்லிகை,
ஊஞ்சலிட்டு ஆடையில்
ஆடைதொட்டு வாசம் பாடுது.
பாட்டு வந்து கூடையில் சுவாசம்,
வந்து கூடுவிட்டு கூடு பாயுது.
வந்து நின்ற தென்றலை
உண்டுநின்ற நாசி, மயங்கிநிக்கிது.
உலை கொதித்து நின்று
ஒன்று கூட ஏங்கி பாக்குது.
கோபப்பார்வை வீசினால்
வீச்சுவார்த்தை பேசினால்,
காத்துக் கிடக்கும் காதல்
எங்குசென்று வென்று மீள்வது.
கருணை கொஞ்சம் காட்டம்மா
காலைக் கொஞ்சம் நீட்டம்மா,
மடிசாய்ந்து மயங்கச் செய்யம்மா,
மந்திரத்தை எடுத்து வீசம்மா!
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்,
நெருப்பாய் சுடுகிறதே.
வான்தெருவினில் வட்டமிட்டால்
வஞ்சகர் கண்களும் கண்ணடிக்கும்.
உன் குளிர்முகம் மலரவிட்டால்
காதலும், கனியும் காமனுக்குள்ளே.
அல்லது மேகச் சேலையை
உடுத்திநில், மறைத்துக்கொள்
உன்னழகை முன்னழகை
பின்னழகை, தேய்ந்து நீட்டாதே.
கொடிமுல்லை வாடிநிற்கும்
செடிமல்லி மாய்ந்துநிற்கும்.
வடிவழகி, அன்ன நடையழகி உன்
வரைந்த வட்டஉடல் கடையிழந்தால்.
வீதிக்கு வந்த பொருள்
விருந்தாகியே போகும் விழிகளுக்கு.
இழப்பு ஏதுமில்லை முகம் காட்டிநிற்க,
முகவரியை மாற்றி நிற்காதே.
ஒருநாளும் முழுமதியே உன்னால்
சுட்டெரிக்கும் சூரியனாக முடியாது.
விந்தையான உயிர்கள்
சிறிய மூளை, பெரிய முதுகெலும்பு
கொடிய விஷம் கொண்ட ராஜநாகம்.
சிறிய மூளை, பெரிய உடல்
துடிப்பான ஓட்டம் கொண்ட தீக்கோழி.
பெரிய மூளை, சிறிய முதுகெலும்பு
கொடிய மனம் கொண்ட மனிதன்.
சிறுத்த மூளை, பருத்த உடல்
கூர்மையான பார்வை கொண்ட ஆனை.
மிகச் சிறிய ஐந்தறிவு ஜீவன்,
துள்ளியோடும் சுண்டெலி.
பள்ளியாட பணிந்துகிடக்கும்,
மிகப் பெரிய உடல், ஆண் யானை.
மூளையே இல்லாத மிகப்பெரிய
உயிர், விவசாயநண்பன் மண்புழு.
பறவையுமில்லை பாலூட்டும்
மிருகமுமில்லை இரவுநாயகன் வௌவால்.
மீனுக்கும் உறவில்லை நிலத்தின்
வாழ்வுக்கும் வழியில்லை, தவளை.
காட்டு ராஜாவானாலும் நாட்டின்
ராஜாவானாலும் பயமேயற்ற கரடி.
பனிக்குள் கிடைப்பின் பல்லாயிரமாண்டு
உயிர் உறைந்துகிடக்கும் மாட்டுவிந்து.
யுகம் மாறினும் நிலைமாறாது
நீர் பட்டிடின் உயிர் பட்டிடும் மீன்முட்டை.
அத்தனை அதிசயமும் அழகிய
நீலப்பந்துக்கு இருப்பினும் இங்கே,
அழகுக்கு இலக்கணம் காதலி,
ஆண்மைக்கு அழகு காதலன்.
வசந்தத்தில் அவள்
காலங்களில் அவள் வசந்தம்,
மலர்களிலே அவள் மல்லிகை
மங்கையரில் அவள் தென்றல்
முகமலர்வில் அவள் தாமரை.
மனங்களிலே அவள் மாளிகை
மந்திரப் புன்னகை அவள் அடையாளம்.
மயக்கும் வித்தையில் அவள் மலர்வனம்
மச்சமுனக்கு அவள் மடிகிடைத்தால்.
தடவிச்சென்ற தென்றலுக்கும்
குளிரக்காணக் கண்ணில்லை.
குனிந்து நனைந்து கூடிக்
குலாவிட துணிவுமில்லை.
தென்றலின் துணையும் உனக்கில்லை
தூவும் மேகமும் வரவில்லை.
நினைவுகளில் மலர்களை
நிறைந்து சுகமாகச் சுமந்துநிற்கிறாய்,
அது தன் நறுமணத்தை இதமாகத்
தொலைவு கடந்தும் வீசிக்கிடக்கின்றது.
காதல் காக்கும்
நானே வருவேன் இங்கும் அங்கும்
நாளை தருவேன் பொங்கும் அன்பும்.
திகட்டத் திகட்ட புகுட்டிவிட்டாய்
காதல் அமுதை காலம் முழுமைக்கும்.
நிறைமதியே வான்கடந்து வந்து
கரம் அனைத்துப் பிடிப்பதெப்போழுது.
முழுநிலவே முன்ஜென்ம மிச்சங்களை
முனைந்து முடித்துவைப்பது எப்பொழுது.
களவு கொண்ட ஒளிக்கதிர்களையே
மறு ஒளிபரப்பு செய்கின்றாயே,
உன்னால் மலரப்போகும் மல்லிகை நான்,
உன் மலர்முகம் புலர மறைத்து,
வலைத்தளப் பின்னல்களில் சிக்கித்தவிக்கும்
உன் காதலை காப்பாற்றமாட்டாயா?
உதடுகளின் உரசலில் பற்றிக்கொள்ளும்
காதலுச்சம் கொண்ட காமம்,
தட்டின மலர்கள் பற்றின காமத்தினால்
ஒட்டி உறவாடின காதல்,
நிரம்பின இன்ப மழையில் குளித்துக்கிடக்கும்
கள்வனைக் காக்க வரமாட்டாயா?
ஏனிந்தக் கலக்கம்
உன்னை ஒன்று கேட்பேன்
உண்மை சொல்ல வேண்டும்.
கண்ணைக் கலந்த பின்னே
கவலை ஏனோ கண்ணே.
கனிந்த காதல் நெஞ்சில்
கவர்ந்த காதல் மடியில்.
கேட்டுக் கேட்டுத்தந்தாய்
கேள்வி இங்கு இல்லை.
வானம் பார்த்த பூமி
மழை காணாது விடுமோ.
வான்மேகம்தான் கற்பம்
கலைந்து நீர் தராது செல்லுமோ.
கலையாத நெற்றிப்பொட்டு
என் முத்தம் படாமல் அழியுமோ.
கைகொள்ளாத உன்னழகை
கடித்துவிடாமல் தொடுமோ.
கண்கொள்ள பின்னழகு
கைபடாமல் கனிந்திடுமோ.
என்னை விட்டுத்தான் நீயும்
ஓடிப்போக நினைக்க முடியுமோ.
Subscribe to:
Posts (Atom)