குரல் குயிலைவிட இனிமை,
இது நண்பர்களின் ஒட்டுமொத்த கூக்குரல்.
காதலின் மொழிஎன்னவோ இந்த ரோஜா,
ராஜாவிடம் சென்றுவிட்டால் சுசிலாதானாம்.
பட்டினம் சென்றதும் பாய்ப் படுக்கை,
பருவம் விரித்தது பலமான பாசத்துடனே.
பசிவந்தபின் பறந்துவிட்டது பலான பாசம்
பயம் ஒன்றையே விதைத்துவிட்டு.
ராஜாவைக் காண சென்ற இந்த ரோஜா,
கூஜாக்களிடம் சிக்கிச் சின்னாபின்னப்பட்டது.
சுசிலாவின் பாட்டு வானொலியில்,
விலைபேசும் தோள்கள் விழிவழியே.
விதிதான் என்று நினைத்திருக்க,
காதலன் வந்தான் மாமா வேலை பார்க்க.
அவனுக்கும் வேலை வேண்டும்தானே!
விஞ்சும் விரகதாபம் தீரவேண்டும்தானே.
பஞ்சுமெத்தைதான், பட்டுச்சேலைதான்,
பகட்டான மாளிகைதான், பந்திவைக்க
பக்கத்தில் பணித்தோழியர்தாம்,
பயம் மறத்த மயக்க வாழ்க்கைதான்.
அழகு மட்டுமே இங்கு மூலதனம்
பின் எல்லாம் பண அறுவடைதான்.
உயர் மனிதர்கள் நெருக்கம்தான்
ஆனாலும் நினைவு ஓரத்தில் துளி கண்ணீர்.
வாடாமல் வழியாமல் வற்றாமல்
வாழ்நாள் முழுமைக்கும் மாற்றவேமுடியாமல்.
நத்தை தன் கூட்டை முதுகில் சுமப்பதுபோல்,
மனதினில் ஒரு விரக்தி கொண்ட துன்பச்சுமை.
No comments:
Post a Comment