Monday, 29 August 2011

கொம்புத்தேன்

தோட்டத்து மலர்களின்
வண்ணத்து அழகினையும்
மணத்து சுகந்தத்தினையும்
வழிந்த தேனின் சுவையினையும்
நனைந்து குளித்தவன்தான்.

விட்டுவைத்த மலரினை பற்றியும்,
விலக்கி வீசிவிட்ட விரல்கள் பற்றியும்
வாடிநின்ற உன் சொல்வனம்
கொண்டே உணர்ந்துநின்றேன்.

தேடி நிற்கும் உன் விழிகள்
உணர்வதில்லை, மலைத்தேனின்
சுவைபற்றியும் அதன் அடை
அமைந்திருக்கும் விதம்பற்றியும்.

கானகத்தின் காணக்கிடைக்கா
அழகு மொத்தமும் அடங்கிச் சிரிக்கும்
அடையின், கொம்புத்தேன் சிதறி வழியும்
தன் இடை கிளைகளின் இதழ் வழியே.

இனிமையை மட்டுமே உறிஞ்சிப் பருகி
மயங்கிக்கிடக்கும் மலைத் தேனி
ஒருநாளும் உதடுகளால் உறைப்பதில்லை
சுவை தனக்குப் பிடிக்கவில்லை என்பதினை.

No comments:

Post a Comment