Saturday 10 November 2012

எங்களின் தீபாவளி.

எங்களின் தீபாவளி.

அந்தக் காலங்கள் ஒரு இனிமைதான். ரொம்ப சுதந்திரமானது. இயற்கையானது. மனதில் கவலையில்லாததும்.
1970 களில் பள்ளிப்படிப்புக் காலங்கள். தீபாவளியின் முந்தய தினம் எங்கள் கிராமத்திற்கு பயணமாவோம். மொத்தகுடும்பமும் அன்றிரவே ஆஜராகிவிடும். ஒவ்வொரு வயது தொகுதிகளும் தத்தம் வயதினருடனும் சேர்ந்துகொண்டு தங்களின் இன்பத்தை தொந்தரவின்றி அனுபவிப்போம். என்வயதொத்த இளசுகள் படையில் நாங்கள் நால்வர். ஊர் சென்றடைந்ததும் நால்வரும் இணைந்தே செல்வோம் எங்கு சென்றாலும். இது எழுதப்படாத தீர்ப்பு.
முதலில் மாமாவைக் காணத்தான் செல்வோம். மாமா என்றால் சின்னத்தை மாமா. எங்களைக்கண்டவுடன் அவர், வாங்கடா வெடிவாங்கப் போவோம் என்று எங்களை அழைத்துக்கொண்டு கடைக்குக் கூட்டிச்செல்வார். கடையில் வெளியே ஒரு சேரைப்போட்டுக்கொண்டு மற்றவர்களுன் அரட்டையடிப்பார். எங்கள் பட்டாளம், எந்த நேரத்திற்கு எந்த வெடி போடுவதென்று தீர்மானித்து முடிவுசெய்து வெடிகளை சேர்க்கத் துவங்குவோம்.
முழு இரவுக்கும் ஒலைவேடியும் துப்பாக்கி வெடியும்தான். அதன்பின் அதிகாலை 5000 சரம், மற்றும் வகைவகையான சரங்கள். மதியவேளையில் அணுகுண்டு, லட்சுமிவெடி வகையறாக்கள். மாலையில் வெளிச்சம் தரும் ராக்கெட், புஸ்வானம், மத்தாப்புகள் எல்லாம். ஒரு முழுநாள் மட்டுமே இந்தக் கொண்டாட்டம். தேவையான வெடிகளனைத்தையும் தூக்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்ததும், அனைவருக்கும் அவர்களின் தகுதி வயதுக்கேற்ப பிரித்துத் தரப்படும். மொத்தம் வெடிவெடிக்கும் வயதில் 16 வீரர்களும் வீராங்கனைகளும் உண்டு. ஒரு சத்தமும் இன்றி பிரித்து அவரவர்களுக்கு ஒரு மஞ்சள் பெருங்காயப் பையில் போட்டுத் தரப்படும். அவர்கள் அதைப் பாதுகாத்து விரும்பியநேரம் போட்டுக்கொள்ளலாம்.
வெடிகள் கைக்குவரும்வேளை இரவு 10 மணி. பெண்கள் பலகாரங்கள் செய்யத் துவங்குவார்கள். நாங்கள் ஒலைவேடியில் துவங்குவோம். அதிரசம், முறுக்கு, சீவல், சீடை, முந்தரிக்கொத்து, அல்வா, அது கக்கும் நெய்யில் மைசூர்பாகு, வடைவகைகள், ரவாலட்டு, ரவை பணியாரம், இட்டிலி,பொங்கல் சாம்பார் அத்தனையையும் இரவு முழுவது விழித்து செய்து முடிப்பார்கள். அவர்கள் முடிக்க, நாங்கள் ஓலைவெடிகளை வெடித்துமுடிக்க அதிகாலை நாலை மணி காட்டிநிற்கும்.
எல்லோரும் குளிக்கத் துவங்குவர். எங்கள் இளவட்ட சங்கம் கிணற்றிலிருந்து எல்லோருக்கும் நீர் இரைத்துக் கொடுக்கும் வேலையைச் செவ்வனே செய்துமுடித்து குளித்து முடிக்கும்பொழுது காலை ஆறைத் தொட்டிருக்கும் மணி. பெருசுகள் முதல் அனைவரும் சேர்ந்து சாமி கும்பிட்டு, அய்யாப்பா எல்லோருக்கும் புதுதுணியினை வழங்க தீபாவளி துவங்கும்.
முதலில் 5000 வாலாவில் துவங்கி அது ஒருபுறம் களைகட்டி ஓடிக்கொண்டிருக்கும். மொத்தக் குடும்பமும் வெடிவெடிப்பதினைக் கண்டு ஆரவாரம் செய்து மகிழும். பின் விருந்து. எதை எடுப்பது எதை விடுப்பது என்பது ஒரு குழப்ப நிலையினை உருவாக்கிவிடும், அளவுக்கு உணவு வகைகள். எல்லாம் ருசியானவை. தேர்ந்த பெண்களின் கைப்பக்குவம். வாழ்வின் பாக்கியமான திகட்டிடும் நிமிடங்கள். உணவு முடிந்ததும் அரட்டைகளும் நையாண்டிப் பேச்சுகளும், கேலியும் கிண்டலுமாக நேரம் ஓடிடிடத் துவங்கும். ஒரு பிரிவு அன்று ரிலீசாகும் புதுப்படம் பார்க்கக் கிளம்பிவிடும். அப்படியே இரவின் விழிப்பு, உணவின் இனிமை, நண்பர்களின் அன்பு எல்லாமாய் சேர்ந்து நம்மை ஒரு கிறக்கத்தில் கொண்டு நிறுத்திநிற்கும். அதற்காக தூங்கிவிடவும் முடிவதில்லை. மாலையில் எல்லா வெடிகளும் தீர்ந்து, வெடிக்காத வெடிகளைஎல்லாம் தெருவில் பொறுக்கியெடுத்து சொக்கப்பானை கொளுத்தும்வரை எல்லாமும் சரியாகவே சென்றுகொண்டிருக்கும்.
ஒவ்வொரு வருடமும் சொக்கப்பானை கொளுத்தும் சமயம் யாருக்காயினும் ஒரு தீக்காயம் ஏற்படாமல் போகாது. முக்கியமாக என் பெரிய மாப்பிள்ளைக்கு ஏதாகிலும் ஒரு சிறிய காயமேனும் ஏற்படாமல் தீபாவளி முடிந்துவிடுவதில்லை. அவனுக்கும் தீபாவளிக்கும் அப்படியொரு இன்பப் பிணைப்பு.
பின்னர் சோகத்துடன் ஒருவரையொருவர் பேசிக்கொள்ளாமல், கணத்த மனதுடன் பிரிந்து ஊருக்குப் புறப்படுவோம். இதுதான் நாங்கள் வாழ்ந்த இன்பத் தீபாவளி.

Wednesday 7 November 2012

ஒரேயொரு முத்தம்

அன்று கல்லூரி வாழ்க்கை முடிவுக்குவரும் கடைசிநாள். அவர்கள் இருவரும் காதலர்கள்தான் என்றாலும் ஒருவரையொருவர் இதுவரை தொட்டுக்கொண்டதேயில்லை. அவளுக்கு அவர்களின் வீட்டில் மிகப்பெரிய பணக்கார மாப்பிள்ளையையும் பார்த்தாகிவிட்டது. அவளால் மறுத்துவிட முடியவில்லை. சூழ்நிலை. இரண்டுமணிநேரங்கள் மனம்விட்டு பேசிக்கொண்டார்கள். அவன் காதலுக்குப் பரிசாக ஒரேயொரு முத்தத்தினைப் பரிசாகக் கேட்டான். அவளால் அதற்கு ஒத்துப்போகக்கூட மனம் வரவில்லை. கடைசியில் இனிசந்திப்பதில்லை என முடிவெடுத்துப் பிரிந்து சென்றனர். துவங்கும்போழுது அவளின் திருமண வாழ்வு இனிமையாய்த்தான் இருந்தது. மனத்தில்மட்டும் ஏதோ ஒரு குறையுடன் இருப்பதாகவே அவளுக்கு இருந்தது. மணவாழ்க்கையை பழையவற்றை முடிவுக்குக் கொண்டுவந்து புதிதாகத்தான் வாழ்வதுபோல் துவங்கினாள். சூல் அமையப்பெற்றாள். சிறகெடுத்த வானில் பறப்பதுபோல் உணர்ந்தாள். அவள் வாழ்வுக்கும் ஒரு அர்த்தம் இருந்ததை விரும்பினாள். என்ன பெயர் வைக்கவேண்டும் என்று மனத்தைக் கசக்கி சில பெயர்களை குறித்துவைத்துக் கொண்டாள். அதில் ஆண் மற்றும் பெண் பெயர்களும் இருந்தன. சந்தோஷ மனநிலையில் வானத்தைப் பார்த்தும் தென்றலுடன் பேசியும் மழையுடன் ஆடியும் கவிதைகள் பல வரைந்தாள். உலகத்தை மறந்தாள். இன்பத்தில் குளித்தாள். உலகமே தனக்காக மலர்ந்து கிடந்ததை அனுபவித்தாள். கணவனின் அன்பை அணுவணுவாக ரசித்தாள்.
குழந்தையின் வளர்ச்சியினை கண்டுகண்டு பூரிப்பாய் உணர்ந்தாள். பிறந்த ஆண்குழந்தைக்கு உடனேயே அருண் எனப் பெயரிட்டு மகிழ்ந்தாள். அப்பொழுதுதான் அந்தப்பேரிடி அவளின் தலையை இடித்து உடைத்தது. ரத்தம் சோதனையில் அவளுக்கு எய்ட்ஸ் இருப்பது தெரியவந்தது. குழந்தைக்கும் இருந்தது. அந்தப்பிஞ்சி முகம் பார்த்து அதன் சிரிப்பில் அழுதாள். விஷயம் தெரிந்தவுடன் கணவன் தூக்குமாட்டி அன்றிரவே இறந்துவிட்டான். ஒருநாளுக்குள்தான் எத்தனைஎத்தனை துன்பங்கள். துயரங்கள். வேதனைகள். விபரீத விளைவுகள். ஆறுதல் சொல்லக்கூட எந்த உறவுகளுக்கும் துணிவில்லை. அருகில்கூட யாருக்கும் வரவிருப்பமில்லை.
வீட்டிற்க்குச் சென்றபின் விட்டத்தைப்பார்த்துக் கொண்டே நேரம் சென்றது. அழுவது முழுவதும் நின்றடங்கியது. பட்டென்று அவன், காதலன் பிரிவின்போழுது கேட்ட முத்தம் கண்ணினுள் திரையில் ஓடியது. அவனை சந்திக்க வேண்டும்போல் மனம் கெஞ்சியது. எல்லா திசைகளிலும் விசாரித்து ஒருவழியாக அவன் இருக்குமிடம் கண்டுகொண்டாள். அவன் வீட்டின் நம்பருக்கு போன் செய்தாள். மறுமுனையில் அவன்தான் போனை எடுத்தான். இவளால் ஒன்றும் பேசமுடியவில்லை.
அவளின் நிலை நண்பர்களின் மூலமாக அவளின் பழைய காதலனுக்குத் தெரியவந்தது. இப்பொழுது அவளின் வீட்டுக்கு அவன் போன் செய்தான். அவள்தான் எடுத்தாள். சில நிமிடங்கள் ஒருவரும் ஒன்றும் பேசிட முடியவில்லை. அவள்தான் முதலில் இப்பொழுது பேசினாள். அவனின் உடல்நலம் விசாரித்தாள். அவன் இன்னும் பேசவில்லை. அழுதுவிட்டான். அவள் எங்கு இருக்கிறாள் என்பதைக் கேட்டுக்கொண்டு அவளைக்காண கிளம்பினான். எப்படியும் நான்கு மணிநேரம் ஆகும்.
அவள் வீட்டையடையும்பொழுது மாலை இருட்டத்துவங்கிவிட்டது. உள்ளே சென்று அவள் பெயரையழைத்து கூப்பிட்டான். படுக்கையறையிலிருந்து சிறிய முனகல் சத்தம் கேட்டதும் அந்தத்திசை நோக்கி ஓடினான். படுக்கையில் அவள் கிடந்தாள். அவள் விஷம் அருந்தியிருந்தாள். குழந்தை சிரித்துக்கொண்டு கையையும் காலையும் ஆட்டிக்கொண்டு கிடந்தது. அவளை அவனின் மடியினில் ஏந்திக்கொண்டு திட்டினான். அவள் சொன்னாள், எனக்கு ஒரு முத்தமிடு அதுவே என்னின் கடைசி ஆசை. உன்காதலுக்கு அதையே பரிசாகத்தருகிறேன் என்றாள். அவன் அதைக் கவனிக்காமல் அவளைத் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினான். அவள் எடுத்த வாயில் அவனின் சட்டையை முழுவதுமாய் பரவி நாறடித்தது. அவன் எதையுமே பொருட்படுத்தாமல் ஓடினான்.
அவள் காப்பாற்றப்பட்டாள். பின்னர் அவளை அவனின் ஊருக்கு அழைத்துச் சென்று கோவிலில் மாலைமாற்றி திருமணம் செய்துகொண்டான்.
அது ஒரு இரவு. படுக்கையறையில் அவனின் மடியினில் அவள். அவன் முத்தமிட வெட்கப்பட்டதால் , அவள் அவனை ஆசைதீர முத்தமிட்டாள். கண்ணுற்ற குழந்தை கைகொட்டிச் சிரித்தது.