Sunday 27 May 2012

மயங்கின மலர்

புதிய மஞ்சளாடையில் புதிய காலை,
அதில் புத்தம்புதிதாய் ஆதவன்,

புதிய ஒளிக்கதிரினுள் ஒளிந்துகொண்டு
ஓடித்திரிந்த உயிருள்ள புதிய தென்றல்,

தென்றலின் ஸ்பரிச உரசலில்
புத்துயிராய் மலர்ந்த புது மலர்.

தேனுண்ட வண்டு மயங்கக்
கண்டோம் இவ்வன உலகத்தில்,

வண்டுண்ட தேனால் மலர் மயங்கக்
கண்டதென்னவோ இந்நிலவொளியில்தான்.

கவிதை எழுதுவாயா என்றேன்.
விழிகளில் விருத்தம் எழுதிநின்றாள்.

உதட்டசைவினில் சொக்கும்படி
இனிய குரலில் பாட்டுப் பேசினாள்.

அழகிய ஒடிந்த இடைநடையில்
நடனமும் ஆடிக்காட்டிவிட்டாள்.

நா நனைய சுவையாய் சமைப்பாயா?- கேள்வி.
ஒட்டின உதடுகள் சுவையாக்கின கொட்டிய நா.

நடைபயிலும் குழந்தைக்கு வயிறு புடைக்க
உணவூட்டி மகிழும் தாய் போல்,

கவிதையுலகில் என் எண்ணங்கள்
அனைத்தையும் விரவிக் கரைத்துவிட்டும்,

மலர்த்தேனுண்ட வண்டினைப்போல்
என்னுள் தேடித்தேடிக் குடிக்கின்றாயே,

போதவில்லையா இந்த போதை, மீள
மனமில்லையா உன்னின்ப மூளைக்கு.

காதலும் கவிதைகளும் மட்டுமே

இந்த அறிமுகம் கூட நன்றாகத்தான் இருக்கிறது,........................

அறிமுகம் நன்றுதான். அதற்காக
நரிமுகம் காட்டிவிடாதே!

சரிமுகம் காட்டி கண்ணுக்குள் வைத்து என்னைக்கட்டிவிடாதே.

சிரிமுகம் காட்டி சிருச்சிருக கொன்று
வதைத்துவிடாதே.

பரிமுகம் காட்டி உன்னுள் என்னைப் புதைத்துவிடாதே.

மௌனங்களால் விலங்கிடப்பட்டு,
விலகிக்கிடந்த குழம்பின வாழ்க்கைதான்.

பயமறியாத கபடமில்லாத மனங்களின்
துணையுடன் கட்டப்பட்ட வீடுதானிது.

இருந்தும் முகம் பழகின சமயம்,
முடிந்து நிற்கின்ற காதல் நிலைதான்.

வஞ்சங்களும், வம்பு வார்த்தைகளும்
நெஞ்சை உருக்கிச் சிவப்பான நினைவுகளும்தான்.

நிஜங்களை உணரமறுக்கும், பணம்
தின்னும் பிணப் பேய்களையும் உணர்ந்தபின்,

விடுதலையாகி வாழ்ந்துகிடப்பது என்னுள்,
கரைந்து விழுந்துகிடக்கும் இக்கவிதைகளே

இம்சையரசிதான் நீஎனக்கு

மழை பெருகி வழியும் ஓடைகள் நூறு,
சேர்ந்து வளைந்து நெளிந்து ஓடிடும் ஆறு.

அளவு மிகுந்து ஆடிட அணைகட்டி,
அடங்கிட்ட, ஆழ்ந்த அமைதியாய் நினைவு.

பெருகிட்ட கனவலைகள் ஏற்பட்டதுன்னால்,
அடைக்கமுடியவில்லை, ஆணவநிலை.

நினைவலைகள் இட்ட குஞ்சுகளாய்
நீந்திக் கணக்கும் கனவலை மீன்கள்.

கட்டி வைத்திருந்த கண்கள்,
விட்டு வைக்க முடியாத விரல்,
சுட்டு சுருண்டு விழுந்த மேனி,
பட்டுச் சிக்கிச் சிதைந்த மனம்,

ஒட்டியிருக்கும், ஊசலாடும் உயிர்,
விட்டுவிட துடித்து முடியாமல்,
வெட்டிவிடவும் வகையில்லாமல்,
கட்டிவைத்துக் காத்திருக்கும் காதல்,

சட்டையினை உரித்து, உதிர்த்து,
உடல் வெளிவந்து உலகையே
அதிரவைக்கும், உயிர் உறையவைக்கும்,
கொடியநஞ்சினைக்கொண்ட நாகம்போல்,

என்னினின் துன்பம் தொலைத்து,
எண்ணின வன்மம் புதைத்து,
இன்பம் விதைத்து, உலாவந்தது,
உன்னின் கடை விளைந்த காதல்.

இந்த நிமிடமும் எந்த இடையிலும்
நொந்த நடையிலும் இன்பமே பயக்கும்
என்னின்ப இதயராணி, இம்சையரசி,
உன்னின்ப உணர்வு விழியசைவால்.

முத்தம் ஒன்று தா

அசந்து மறந்தால் இறுக்கி,
மூச்சை அழுத்தி நெருக்கி,

உயிரை உருவி உருக்கி,
உடல் விழுங்கியுடல் பெருக்கி,

நிலைமறந்து கிறங்கி,
உறங்கி, கிடக்கும் மலைப்பாம்பு.

அது உயிர் துறத்தி
உடல் பெறுவது.

காதலி,

அன்பு முகம் இறுக்கி,
அனைத்த முத்தம் நெருக்கி,

உயிர் கலந்து உருகி
உறிஞ்ச, உடல் மருகி,

உறைந்து கிடக்கும் உயிர்
பருகி, உடல் கலப்பது.

உன் வான்மழை உதிர்த்த
கனவு, வார்த்தைத்துளி,

வழிந்ததும், என் முகம்
ஏங்கிக்கிடக்குது அடுத்ததுளி.

அண்ணாந்து நோக்குது தினம்
மறுதுளி எப்பொழுதுவருமென்று.

பொய்யுரைப்பதூவும், களவுசெய்து
கண்ணுரைப்பதூவும்

கலங்காத காவியக்
காதலில் நற்கருப்பஞ்சாரே

இதையத்தின் துடிப்பிலும்
நீ லப்பை ஒலித்தால்
எனக்கு டப்பைக் கேட்குமாறு
செய்விக்கின்றாயே.

இரவுகளின் துடிப்புகள்
மூன்றாயினும் உயிரின்
துடிப்புகள் ஊன்றி நிற்கின்றதே,
கலக்கவே துடிக்கின்றதே!

காத்திருக்க முடியாமல்
ஒடியலையும் மேகங்களைபோல,
தேடித்தேடி நுழைகின்றதே!
நட்பினுள் இன்பக்காதலினை.

கனவினில் நீந்தி நீண்டுகிடக்கும்
நம் முத்தமே முடிந்திட மறுக்கும்,

இந்நிலையில், சந்திக்கும் நிமிட
உயிர்முத்தக் காலளவு உணர்தலேப்படி?

அதன் மொத்தசுவை முடிதலேப்படி?
ஆதவனின் ஒளிவெள்ளம் நிற்பதேப்படி?

அந்தச் சுவையென்ன, இனிப்பா?
இன்பம்கொள்ள இறைதந்த மோட்சமா?

உயிர் உரசலுக்கு நடக்கும்
உதட்டுரசல், ஒத்திகையோ?

உன்னையும் என்னையும்
ஒட்டக்கொடுத்த உயிர்பசையோ?

காலம் மறந்திடக் காமன்
காட்டும் கைவரிசையோ?

கலந்த சர்க்கரை பிரியமுடியா நீரினை
நினைவுறுத்தும் சுவைபிரியா நினைவலையோ?

காதலுக்கு வாழ்த்து

வான் மழைக்காக ஏங்கி,
வானம் பார்க்கும்
வறண்ட நிலமாக
இருக்கும் நான்,

புதிதாய் என்னுள்
வேர்விட துடிக்கும் நாற்றுக்கு
எப்படி
உயிர் கொடுக்க முடியும்...?

கேட்கமட்டுமே முடியும்
இந்தக்குயிலின் கீதத்தை,

காணமட்டுமே இயலும்
இந்தமயிலின் ஆட்டத்தை,

வீசுதென்றல் தனக்கான
இன்பம் நினைத்து வீசுதலில்லை.

வானமழையும் ஒவ்வொரு
நாற்றையும் வளர்க்கப் பொழிவதில்லை.

எல்லாப்பூக்களும் கனி
கொடுத்து நிற்பதில்லை.

சில முரண்பாடுகள் இன்றி
எவருக்கும் வாழ்க்கையில்லை.

எல்லையில்லா ஆகாயம்
அளவில்லா இன்பம்
நிரந்தரம், காதல்போல்.

ஈர்த்த கடலினை கோர்த்து,
எல்லைகட்டின மேகங்கள்
உருமாறும் தரிசனம்.

அற்ப ஆயுள் கொண்ட மேகம்
சொற்ப ஒளிகொண்ட வானை
அசுத்தப்படுத்தமுடிவதில்லை.

நிலை மாற்றம் கொண்டிருக்கும்
அவை, நிறைக்கமுடிவதுமில்லை.
அதுவே காமமும் காதலினைப்போல்

உயிரே......,

உன்னை நினைத்து
உனக்காக உயிர் வாழ,
ஆயிரம் பேர் இருப்பினும்.......,
எனக்கு மகிழ்ச்சியே......,

ஏனெனில் .......,

உன்னை நினைத்தே வாழ்ந்து......,
உனக்காகவே
உயிர் விடும் ஒரே ஜீவன்.......,
நாந்தானடா என் அன்பே.!

எனக்குள்............

கரைந்தே கலந்து கிடக்கும்
உன்னை இரும்பென எங்ஙனம்
பிரித்துப் பிய்த்தெடுக்க இயலும்.
அல்லது தேய்த்துக் கொல் எறும்பென.

தேடித்தேடி தழுவவந்த
வீசுதென்றல் தவழும்போழுது
தவற விட்டுவிட்டு அனுபவிக்காமல்,
ஜன்னலைக் குறை சொல்கிறேன்.

கனிந்த காதல் களிப்புற்று
கவலைமறந்து, கைக்குழந்தை
தாயிடம் பிதற்றி கைவைக்குமே
கைகள் கண்டவிடமெல்லாம்,

அதனினைப்போல் மனம்
நினைத்தவாறெல்லாம்
தினம்தினம் உளறித்திரிகின்றேன்,
உளம்முழுதும் உனையே நினைத்து.

காதலை வாழ்த்த விரும்பினேன்,
விழைவு ஒரு இனிய முத்தமாற்றம்
ஆன்மாவினுள் கொண்டாடினது.

இனிய அந்த முத்தத்தின்
கால அளவு, உறைந்த
ஒரு மணித்துளி, உணரமுடிந்ததா?

படத்தோற்றத்தின் சொத்துக்களின்
அளவு கூடிவிட்டமையால்,
சொத்துக்குவிப்பு வழக்காகியது.

Wednesday 16 May 2012

நேர்மையாய் வாழும் மனநிலை கொண்ட இன்றைய இந்தியன்


1) வரிகட்ட மலைக்கிறான்.
ஏனெனில், அரசு செய்யவேண்டிய
மருத்துவ உதவி, நகராட்சி சாலைகள் பராமரிப்பு, குடிநீர், விலைவாசி கட்டுப்பாடு, கொசு ஒழிப்பு, ஏழைகள் மாதவருவாய் 15000 க்கு உயர்த்தும் முயற்சிவிவசாயத்திற்கு உதவும் தன்மை, தடையில்லாத மின்சாரம், ரௌடிகளை அடக்குதல், அரசு எந்திரம் மாமூல், லஞ்சம்  இல்லாத துரித நடவடிக்கைகள்,
இவைகளை செய்யவோ அல்லது கட்டுக்குள் வைக்கவோ எந்த முயற்சிகளும் மேற்கொள்வதில்லை.
2 ) நிலம் வாங்கும், விற்கும் பொழுது பத்திரப் பதிவுத் தொகையை குறைந்த மதிப்பில் பதிவு செய்கிறான். ஏனெனில் பதிவுக் கட்டணம் அதிக சதவிகிதம் வசூலிக்கப்படுகிறது.
3) தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் கொடுக்கிறான்.
தன்னுடைய நிலத்தை அரசியல் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்க மிகவும் கவனமாயிருக்க வேண்டியதிருக்கிறது.
கோடிகளை கொள்ளையடித்தவன் அதிகாரிகளை கையில் எடுத்து இஷ்டம்போல் செலவிடத் துணிகிறான். மேலும் பட்டா மாற்றம் துரிதமாக நடப்பதில்லை. பணம் இல்லையெனில் வாழவே முடியாத நிலையை உருவாக்கிவிடுகிறார்கள்.
4) வருமான வரிகள் கட்டும்பொழுது எப்படிக் குறைத்துக் கட்டுவது என்றே ஆராய்கிறான்.
நாம் கட்டும் வரிப்பணம் எப்படியும் நல்வழியில் அரசினால் செலவிடப்படாது என்ற கவலை.
வாடகை மட்டுமே 15000 வரை இருக்கும் பொழுது, வருமான வரையறை மிகமிகக் குறைவாய் இருப்பது.
 
கோடிகோடியாய் கொள்ளையடிக்கும் அதிகாரிகளும், அரசியவாதிகளும் வரியே கட்டாமல் வலம்வரும் பொழுது நாம் மட்டும் கட்டவேண்டுமே என்ற நிலை.
எப்படியும் எல்லாவித லஞ்சத்திற்கும் பணம் செலவளித்தேயாக வேண்டிய நிலையில் கறுப்புப் பணத்தின் உருவாக்கம் அவசியத் தேவையாகிறது.
5) அரசியல், அதிகாரிகள்  அராஜகத்திற்கு அடிபணிகிறான்.
தவறே செய்யாவிடினும் லஞ்சத்திற்காக ஏதாகிலும் குற்றம் கண்டுபிடித்து, தொழிலே செய்யவிடாமல் அதிகார துஷ்ப்ரயோகம் செய்து தொந்தரவு கொடுப்பது.
 கோர்ட், கேஸ்கள் முடிக்க 10 வருடங்கள் ஆகும் என்றநிலையை சாதகமாக்கி துணிந்து தப்பு, அராஜகம் செய்வது.
 
ஒரு கேள்வி: தொழில் செய்வோர்கள் எல்லா வகைகளிலும் தவிர்க்கமுடியாமல் அதிகாரிகளுக்கு லஞ்சமோ மாமூலோ கொடுத்தே வாழவேண்டியுள்ளது.
ஆனாலும் அவர்கள், வருமானவரி அதிகாரிகளையும் மற்ற அரசு அதிகாரிகளையும் சந்திக்கும்பொழுது பணம் கொடுத்த கணக்குகளுக்கும் விளக்கமளிக்க வேண்டியுள்ளது.
உண்மைகளையும் கூறமுடியாத நிலைமை.
அரசு, மக்களின் நல்வாழ்வுக்கும் வழிவகுக்காமல், தொழில் செய்வோரையும் வாழவும் விடுவதில்லை.