Wednesday, 13 March 2013

ஒரு தீவிரவாதம், ஒரு கடவுள்

ஒரு தங்கை, அவளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். தம்பிக்கு படிக்க மெடிக்கல் சீட் கிடைத்திருக்கிறது, அவனை நன்றாகப் படிக்க வைத்திட வேண்டும். நம்மால்தான் படிக்கமுடியாமல் போய்விட்டது, அவர்களாவது சிறப்பாக வாழ்ந்திட வழிசெய்திட வேண்டும். அவர்கள் குடும்பத்திற்கு பூர்வீகமாய் பாத்தியப்பட்ட அந்த 20 செண்ட் நிலம். அது ஒன்றே அத்தனைக்கும் ஆதாரம். நான்குவழிச் சாலையின் உபயம். வாஜ்பாய் வாழ்க. அதன் தற்போதய விலை, 20 லட்சம். ஆனால் அவனின் கையில் காலனா கிடையாது. இதுதான் அவனின் நிலை. சிறுவயதிலேயே பெற்றொர் இறந்துவிட்டதால், அவன் வாழ்வு மிகவும் கடினமாகிப் போய்விட்டது.
யாரோ ஒருவர் அமெரிக்காவில் பெரிய இஞ்சினியராம், அந்த இடத்தைக் கேட்டுவந்தார். ஒருமாதிரியாகப் பேசி மொத்தம் 19.5 லட்சத்திற்கு முடிவாகியது. 15 நாட்கள் மட்டுமே கெடு. அவரும் அதன்பின் அமெரிக்காவுக்கு திரும்பிட வேண்டியதிருந்தது. ஒரே கண்டிஷன், அது ஜாய்ண்ட் பட்டாவில் இருப்பதால் தனிப்பட்டா பிரித்து வாங்கித்தர வேண்டுமாம். தனிப்பட்டா ஒன்றும் கஷ்டமில்லை என்று நினைத்ததுதான் தவறாகிப்போனது. தாசில்தார் நாட்களை கடத்திக்கொண்டு இருந்தார். அவனும் தினமும் அலைந்துகொண்டுதான் இருந்தேன். எல்லாமும் சரியாகவே இருந்தது ஆனாலும் தாசில்தார் ஏன் இப்படி அலையவிடுகிறார் என்பது புரிந்துகொள்ள முடியவில்லை. கொஞ்சம் முண்டிக் கேட்டபொழுது கிராம அதிகாரி சொன்னார், கையெழுத்துப்போட தாசில்தார் பணம் கேட்கிறார். பொதுவாக இதுபோன்ற இடத்துக்கு 2 லட்சம் வாங்குவார், நாந்தான் குறைத்துப்பேசி 1 3/4 க்கு சம்மதம் வாங்கியிருக்கிறேன் என்றும், பணம் கைமாறியதும் வேலை முடிந்திடும் என்றார். அவனுக்கு தூக்கிவாரிப்போட்டது. அவனால் அவ்வளவு பணம் கொடுக்கவும் முடியாது. மனமுமில்லை. வாக்குவாதம் ஆகிப்போனதால், ஏறுக்குமாறான காரணங்களைக் கூறி வேலைமுடியாமல் ஆக்கிவிட்டார், தாசிதார். இடமும் சொன்ன நாளில் முடிக்கமுடியாததால் எல்லாமும் தடையாகிப்போனது. அவன் வாழ்க்கையின் மிகப்பெரிய அவமானம். தங்கையை மணமுடிக்க இன்னும் சிலகாலம் காத்திருக்கவேண்டியதாகிற்று. தம்பியின் படிப்பும் கேள்விக்குறி. கோபம் அவன் கண்களை மூடிவிட்டது. இதற்கெல்லாம் காரணமான அந்த தாசில்தார்மீது வெறுப்பேறியது. அவனுக்கு அதைப் புரியவைக்க வேண்டும். வாழ்க்கையில் அவன் இனி தவறே செய்திடக்கூடாது. அவனின் எண்ணம் அதையே திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருந்தது. கொள்ளையடிப்பதை பணமுள்ளவனிடம் அடிக்கவேண்டியதுதானே, நான் என்ன பாவம் செய்தேன், என்றெல்லாம் புலம்பித்தீர்த்தான் மனுதுக்குள்ளே.
தாசில்தாரின் வீட்டருகே சென்று அவரின் நடவடிக்கைகளை அனைத்தையும் நோட்டமிடத் துவங்கினான். பத்துனாட்கள் மாறுவேடத்தில் நெருக்கமாகக் கவனித்தான். காலையில் 4 மணிக்கே எழுந்துவிடுகிறார். சரியாக 6 மணிக்கு தினமும் வீட்டருகே உள்ள கோவிலுக்குச் செல்கிறார். அடுத்தவன் வாழ்வை கொஞ்சமும் இரக்கமின்றி அழித்துவிட்டு, கடவுளுடன் என்ன வழிபாடு வேண்டியதிருக்கிறது? செய்யற தப்பையெல்லாம், பாவங்களையெல்லாம் செய்துவிட்டு அவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டால்மட்டும் பாவம் கழுவப்பட்டுவிடுமா? இதில் அங்கிருந்த பிச்சைக்காரர்களுக்குவேறு தானம்! அதன்பின் அருகிலுள்ள மைதானத்தில் நடைப்பயிற்சி. மைதானம் செல்லும் வழியில் ஒரு சிறு பாதை. அங்கு ஆளரவமே இல்லை. சரியாக பத்துக்கு அலுவலகம். இப்படிப்பட்டவங்கள் எல்லாம் வேலைக்குமட்டும் சரியாகவே சென்றுவிடுகிறார்கள். மாலை 7 க்கு மறுபடியும் வீடு. இதுதான் அவரின் ஒருனாளின் வாழ்க்கை. இவற்றில் கோவிலிலிருந்து மைதானம் செல்லும்வேளை அந்த சிறு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியினை, அவரைத் தாக்க சரியான இடமாக அவனுக்குத் தோன்றியது. அந்த நேரத்தையே முடிவுசெய்தான். ஒரு 14எம்எம், ஆறடிக் கம்பி ஒன்றை எடுத்து வைத்துக்கொண்டான்.
அந்த இடத்திற்கு அந்த நாள் வந்தார். சரியாக பின் மண்டையில் ஒரே அடிதான் சுருண்டு வீழ்ந்துவிட்டான். கிரிக்கெட்டின் புல்ஷாட்பொல். கோவிலுக்குச் சென்று அதே கடவுளை தரிசித்தான். அவர் அவனைப்பார்த்து இன்னும் சிரித்துக்கொண்டுதான் இருந்தார். ஒரு தீவிரவாதம், உருவாக்கம்.
 

No comments:

Post a Comment