Wednesday, 18 July 2012

அய்யாம்மா

என் வாழ்க்கையில் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாத விஷயம் இது ஒன்று.
என் சித்தப்பா என் அயாம்மாவின் கடைசிக் குழந்தை. அதாவது எனக்கு ஒரு வயது கம்மி.
என் அய்யாம்மாவுக்கு 12 குழந்தைகள்.
ஒரு மூத்த பேரன் என்று எனக்குக் கிடைக்கவேண்டிய அன்பு என் அய்யாம்மா மற்றும் அப்பாவிடமிருந்து (எங்களூரில், அய்யாவைப்பெற்றவரை அப்பா என்றுதான் அழைப்பார்கள், உண்மையில் அய்யாப்பா) எனக்கு கிடைத்ததேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

என் அய்யாம்மாவும் அப்பாவும் சண்டையிட்டு, கருத்து வேற்றுமையுடன் இருந்து என் வாழ்நாளில் நான் பார்த்ததேயில்லை.
அதுபோல அவர்கள் உறங்கியும் பார்த்ததில்லை.
வீட்டில் நான்கு பசுக்கள், இருபது கோழிகள் ஆறு வான்கோழிகள், அதனால் பால் விற்பனை, முட்டை விற்பனை எல்லாம் நடந்துகொண்டிருக்கும்.
நாங்கள் எங்களூருக்கு கோடைவிடுமுறை இருமாதங்கள் முழுமையாய் சென்று களிப்போம்.
எங்களின் வேலை, கறந்தபாலைக் குடிப்பது, இட்டவுடன் பச்சை முட்டைகளை உடைத்துக் குடிப்பது, இவைகள் முக்கியமாக அடங்கும். ஒருநாள் காலையில் சாப்பிட உட்கார்ந்ததும், முட்டை தோசை வேண்டுமா என்று கேட்டார்கள். மூன்று முட்டை தோசைகள் சாப்பிட்டாயிற்று. வழக்கம் என்னவென்றால் பேத்திகளுக்கு (சித்தியின் வழி தங்கைகள்) முட்டையே கொடுப்பதில்லை. கொடுத்தாலும் ஒன்றேயொன்று மூன்று மாதங்களுக்கொருமுறை. இப்பொழுது பிரச்னை என்னவெனில் அவன் நான்காவது முட்டை கேட்டான். அவர்களால் கொடுக்காமலும் இருக்கமுடியாது, மூத்த பேரனாயிற்றே! கொடுத்தால் சித்தி ஏதும் சொல்லிவிடவும் கூடாது. அடுத்து ஐந்தாவது முட்டையைக் கேட்டபொழுது ஒருமாதிரியான கோபச் சிணுங்கள் சிணுங்கிவிட்டு (சந்தோசம்தான் ஆனாலும் வெளிக்காட்டமுடியாது.) சொன்னார்கள் ஜாடையாக, சித்தியின் காதுகளில் விழும்படியாக, "அவங்க அம்மா நாலு கோழிய கொடுத்துவிட்டிருக்காங்கள்ள அதான். ஒம்பிள்ளைக்கும் ஒரு முட்டைய ஊத்திக்கொடு." என்று.

பம்பரம் சுழல்வதைப் பார்த்திருக்கின்றீர்களா! பட்டாசில் தரைச்சக்கரம், பற்றவைத்துவுடன் சிறிதாகச் சுழலத்துவங்கி பின் அப்படியே மேலே பறந்துசெல்லத் துடிப்பதுபோல் சுழலும். அப்படியாக வேலை செய்வார்கள் என் அய்யாம்மா. அந்தக்காலத்தில் எந்த மிக்சி போன்ற உபகரணங்களும் நடைமுறையில் இருந்ததில்லை.
காலையில் எல்லோருக்கும் எழும்பொழுது காப்பி போட்டுட்டு வைத்துக்கொண்டு காத்திருப்பார், பின் சட்னியரைத்து காலையுணவு தயார் செய்வது, மாடு, கோழிகளைக் கவனிப்பது, மதிய உணவு செய்து முடிப்பது, மாட்டுக்கு பருத்திவிதை புண்ணாக்கு உணவை தாயார் செய்வது, மாவாட்டுவது, மாலை மார்கெட் சென்று காய்கறிகள் வாங்கிவருவது, எல்லோரும் பள்ளிசென்று வந்ததும் அவர்களைக் கவனிப்பது, இதனிடையில் கணவனுக்கு பணிவிடைகள் வேறு, பேரன் பேத்தி மற்றும் தன் குழந்தைகள் எல்லோரையும் கவனித்துக்கொள்வது,
பின் இரவு உணவினை உண்டபின் நாங்கள் சுவர்க்கம் சென்றுவிடுவோம் என்பதால் எங்களின் நாள் முடிந்துவிடும்.
வீட்டின் செலவுகளனைத்தும் பால், தயிர்,முட்டை, விற்கும் வரவுகளிலேயே ஓடிவிடும். மிகவும் சிக்கனமாக வாழ்ந்தவர்கள்.
நம் அம்மாக்கள், அவரின் திறனின் அருகில்கூட நிற்கமுடியாது. படுத்துவிடுவார்கள், பின் ஒருவாரம் ஒன்றுமே வீட்டில் நடக்காதநிலை ஆகிவிடும்.
சமையலிலும் சரியான கில்லாடி. அவர்களின் மண்சட்டி விரால்மீன் மற்றும் கெளுத்திமீன் குழம்புக்கு நான் அடிமை. இப்பொழுது நான் அசைவத்தை நிறுத்திவிட்டிருக்கிறேன், முப்பது வருடங்களாகின்றன.
எல்லோரிடமும் சமமான அன்பு காட்டுவார்கள். எந்த முக்கிய விவகாரங்களிலும் தலையிடமாட்டார்கள்.
ஏனோ யாருக்குமே என் தாயை மட்டும் பிடிக்காமலேயே போய்விட்டது. முகத்திற்கு நேரேயே பேசிவிடுவதாலா? என்று தெரியவில்லை.
சரி அய்யாம்மாவுக்கு வருவோம். என் காசியக்காவின் மரணம், சபரியக்காவின் குழந்தைப்பிறப்பின் பொழுது ஏற்பட்ட மரணம், இவைகளை அவர்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ஏன் ஏற்றுக்கொள்ளவே முடியாமல் கடவுளிடம் அரற்றுவார்கள். அதன்பின் கடமைக்கே வாழ்வதுபோல தோன்றியது அவர்களின் வாழ்க்கை.
முதல்முறையாக தன் மகனின் வீட்டிற்கு திருச்சி சென்றிருந்தார்கள்.
ஒருநாள் திருச்சியிலிருந்து சித்தப்பா கூறினார், அய்யாம்மாவுக்கு புற்று என்று. வயிற்றின் பக்கம் உணவுப்பாதையில்.
டாக்டர்களும் உறுதிசொல்லிவிட்டனர். காப்பாற்றுதல் அரிதென்று. என்னென்னவோ முயற்சித்தும் பலனில்லை. ஆறு மாதங்கள் இருப்பார் என்றும் கேடு வைக்கப்பட்டது.
எங்கள் வீட்டில்தான் பின்னர் வாழ்ந்தார். டாக்டர் முன்னெச்சரிக்கையாய் பல விஷயங்கள் சொன்னார். வலியால் நாலு தெருக்கள் கேட்கும்படி கத்துவார்கள் என்றும்.
நாங்கள், எங்கள் படை எப்பொழுதும் அவர்களிடம் பேசும்பொழுது சிறுவயதிலிருந்தே ஜோக்கும் நையாண்டியுமாயே பேசிக்கொண்டிருப்போம். எங்களை ஒவ்வொரு நிமிடங்களிலும் நன்றாக ரசிப்பார்கள். அகத்தின் வலி சிறிதுசிறிதாக முகத்தில் தெரியத்துவங்கியது.
நாங்கள் கல்லூரிநாட்களில் இருந்தபொழுது அது, அவர்களை இந்தசமயம் நெருங்குதலை குறைத்துக்கொண்டிருந்தோம்.
ஒருநாள் அய்யாம்மா என்னிடம் கேட்டார்கள், "செத்துப்போகப் போகிறவள்தானே என்று என்னோடு பேசமாட்டேன் என்றிருக்கின்றாயா?" என்று.
ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டேன். அதன்பின் அவர்களுடன் மிகுந்த அன்புடன், ஒரு மூத்த பேரன் என்கின்ற வகையில் மிக அருகிலேயே இருந்தேன்.
ஆனாலும் ஒருநாளும் வலியென்று யாரிடமும் சொன்னதேயில்லை. டாக்டரே வியந்து சொன்னார், "என் வாழ்நாளில் இப்படியொரு வைராக்கியமான பெண்ணைக் கண்டதேயில்லை."
இறந்தபின், அவர்களுக்குரிய ஒரு இறந்தநாளில் அவர்களுக்காக செய்யப்பட்ட படையல்களை, படைக்காமல் சென்றுவிட்ட குற்றத்திற்காக, தனக்கு எப்பொழுதுமே பிடிக்காத என் தாயையும் தன்னோடு எடுத்துக்கொண்டார்கள்

No comments:

Post a Comment