Saturday 14 July 2012

அக்கா என்ற அத்தை

அவனின் வாழ்க்கையில் அவனை மிக அதிகம் பாதித்தவள் அவள்தான்.
அத்தை, அக்காள், அல்லது அம்மா என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். ஆனால் அத்தை முறைதான் உண்மைநிலை.
அவனின் மூன்று வயதில் என்று நினைக்கிறேன். அப்பொழுது அவளுக்கு 12 வயதிருந்திருக்கும். இன்னும் பசுமையாகவே நினைவுகளின் ஓரத்தில் ஒட்டிக்கிடக்கின்றது இந்த நிகழ்வு.
ஒரு அழகிய குருவிக்குஞ்சு அவனருகில் அமர்ந்திருந்தது. அதற்குப் பறக்க முடியவில்லை.
அப்பொழுது அவள்தான் அந்தக்குஞ்சினை எடுத்து அதன் கூட்டினுள்விட்டாள். மற்றும் அதற்கு தினமும் உணவுவைப்பாள் பறக்கப் பழகுவரை. அது ஒரு இறக்கம் கொள்ளும் தன்மை. அன்பு.
காசிமணி என்பது அவளின் பெயர். பெயருக்கேற்றவாறு ஒரு தெய்வம் அவள்.
என்னின் மானசீகத் தோழி. எங்களுடன்தான் சிலகாலம் வாழ்ந்தாள். உரிமையோடு என் தாயுடன் சண்டையிடுவாள். என் தாய்க்கும் மகளாகவே வாழ்ந்தாள்.
என் 6 வது வயதில் என் பெற்றோர் வெளியூர் சென்றிருந்த ஒருசமயம், நான் அவளின் பொறுப்பில் இருந்த ஒரு நாளில் என்னை அதிகமாகத் திட்டிவிட்டாள். காரணமென்னவென்று ஞாபகமில்லை. நானும் மிகுந்த  கோபத்துடன் அவள் வேலையாய் இருந்த நிமிடம் அடுக்கப்பட்டிருந்த தலையனைக் குவியலினுள் புகுந்த நினைவு மறந்து உறங்கியேவிட்டேன்.
என்னைத் தேடினவள், நான் கோபப்பட்டு வெளியே சென்றுவிட்டேன் என்று எண்ணி கிட்டத்தட்ட ஊர்முழுக்க தேடிநின்றாள். நான் கிடைக்கவில்லை. எப்படிக் கிடைப்பேன், நான்தான் தலையனைக் குவியலினுள் வெளியே தெரியாமல் உறங்கிகிடக்கிறேனே.
ஒரு 2 மணிநேரம் கழித்து நான் விழித்து வெளிவந்தேன். அங்கு என் அக்கா அழுதுகொண்டிருக்கிறாள். அருகில் பக்கத்து வீட்டார்கள் அமர்ந்திருக்கிறார்கள்.
என்னைக் கண்டவுடன் வாரியெடுத்து அணைத்துக்கொண்டாள். இப்பொழுது அழுகை இன்னும் தீவிரமாக இருந்துகொண்டிருந்தது.
நான் என்ன நடந்ததென்று புரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன். மறக்கவேமுடியாத நிகழ்வாக அது மாறிவிட்டது.
படிப்பு முடிந்தபின் எங்களின் கிராமத்திற்கே சென்றுவிட்டாள் தாத்தாவுடன்.
பின்னர் அவளுக்கு விருப்பமில்லாத ஒரு இடத்தில் திருமணமும் முடித்துவைக்கப்பட்டது. யாரிடமும் கருத்துக்கள் கேட்கவில்லை என் தாத்தா. அந்தக் கணவன் என்னவெல்லாம் என் அக்காவிடம் கேட்டான் என்பதல்ல இந்தக்கதையின் சாராம்சம். கேட்டால் அந்த இறந்துவிட்டவனை தொண்டிஎடுத்துக் கொல்லநினைப்பீர்கள்.
ஒரு உன்னதமான உயர்ந்த அன்பினையும், கரிசனத்தையும் அடிப்படையாக்கி பதியப்பட்டிருக்கின்றது இந்தக்கதை.
புகுந்த வீட்டிலும் இருந்த அனைவரும் (கணவனைத்தவிர) அவளை அன்பாகவே நடத்தியிருந்தார்கள். ஆனாலும் அவளுக்கு வாழ்கை கசந்துவிட்டது.
என் தாயையும் தன் தாயாகவே மதித்துவிட்டிருந்தமையால், மனம்விட்டு இங்குவந்து பேசுவாள். மற்றவர்களின் வார்த்தைகளை மதிக்கமாட்டாள்.
ஒரு தினம் இங்கு வந்திருந்தபொழுது, இரவு முழுவதும் என் தாயிடம் கதறியிருக்கிறாள், \"இனி இங்கேயே உங்கள் மகள்போல இருந்துகொண்டு வாழ்ந்துவிடுகிறேன், கணவனிடம் செல்லமாட்டேன்\" என்று பிடிவாதமாக சொல்லியிருக்கின்றாள்.
நம் சமூகம்தான் எப்பொழுதும் இதுபோன்ற குரல்களுக்கு மதிப்பளிப்பதில்லையே.
அறிவுரைகள் பல அள்ளி வழங்கப்பட்டன.
கடைசியில் ஊருக்குச் செல்ல கிளம்பினபொழுது சொன்னாள், என் காதுகளில் இன்றும் 42 வருடங்கள் கழித்தும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது, \" நான் போகிறேன், இனி உங்களிடம் வரவேமாட்டேன்\" என்று விரக்தியான ஒரு தாழ்ந்த குரலுடன். அந்த வார்த்தைகளை யாரும் பெரிதுபடுத்திக்கொண்டதாகத் தெரியவில்லை. இதுதான் விதி.
ஆனால் இந்தகாலங்களில் இப்படி நடந்துவிடுவதில்லை. மதியினை பயன்படுத்தி விடுகின்றனர், மக்கள்.
பத்து நாட்களுக்குப்பின் எங்களூரில் எங்களின் தாத்தாவின் அறுபதாம் திருமணம் தடபுடலாக நடந்தேறியது.
அன்றுகூட என் அக்காவின் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் தெரியவில்லை. அவள்தான் ஏற்கனவே என் தாயினை கண்டுவந்தபின் முடிவு செய்துவிட்டாளே, என்ன எப்படி அதை நடத்தவேண்டுமென்று. எல்லோரும் விடைபெறும் சமயமும் ஒரு வார்த்தையை விட்டாள், \"அடுத்தவாரம் சந்திப்போம்\" என்று.
சில நேரங்களில் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளை நாம் தவற விட்டுவிடுகிறோம்.
பொங்கல் திருநாள் என்றால், படிக்கும் பிள்ளைகளைக் கொண்டுதான் வீட்டுவேலைகள் அனைத்தையும் செய்யவைப்பார்கள் நம் பெற்றோர்கள். இது இங்கு தமிழகத்தின் வழக்கம்.
அப்படித்தான் அவனும் தன் பெற்றோருக்கு கட்டுப்பட்டு வீட்டுக்கு வெள்ளையடித்துக் கொண்டிருந்தான்.
ஒரு தந்தி வந்தது.
அந்தக் காலத்தில் எல்லாம் தந்திதான்.
தந்தி என்றால் ஏதோ செய்தி, கவனித்தான் எல்லோரையும்.
படித்தவுடன் தந்தையின் தலைகவிழ, தாய் கதரிக்கதரியழ, விஷயம் தெரிந்தபின்னும் அவன் அழவில்லை.
அதுதான் இன்றுவரை அவளை நினைக்கும் பொழுதெல்லாம் அழுதுகிடக்கின்றானே.
அவள் விஷமருந்தி இறந்துவிட்டிருக்கிறாள்.
ஊர் செல்லும்வரை எந்த எண்ணமும் தீண்டவில்லை.
அவளை அமரவைத்திருந்தார்கள்.
அவளின் முகத்தழகு அவள் இறந்ததினை உணர்த்திட முடியவில்லை. சிரித்துக் கொண்டுதானிருந்தாள். உறவினர்கள்தான் ஒவ்வொரு நிமிடமும் உணர்த்திக்கொண்டிருந்தனர் அவள் இறப்பை.
அவள் இறந்த அறையினுள் அந்தக் கட்டிலில் சென்று அவனும் படுத்துக்கொண்டான். சிந்தனையேதும் இல்லை. எல்லாமும் நின்றுவிட்டிருந்தது. ஓடாத கடிகாரம்போல்.
அவள் அவனுக்குள் தன்னை முழுவதுமாய் பரப்பிக்கொண்டு இருந்திருந்தாள். அது அந்தப்பொழுதில் அவனால் உணர முடியவில்லை. இந்தநிமிடம்வரை இப்பொழுதும் அவளிருப்பை அவனுள் உணரமுடிகிறது.
வெளியில் சொன்னால் முட்டாள் என்று பட்டம் கட்டிவிடுவார்கள்.
நாட்கள், வருடங்கள் கடந்துவிட்டிருக்கின்றன.
இன்றும் அவள் போட்டோவினுள்ளும் எனக்குள்ளும் சந்தோசமாய் சிரித்துக்கொண்டுதான் இருக்கின்றாள். சில நேரங்களில் என் மகளின் சிரிப்பினூடே அவளை காணமுடிகிறது. கொஞ்சம் மாற்றிக் கொண்டிருப்பாளோ தன்னை.

No comments:

Post a Comment