Monday 30 July 2012

அய்யாப்பா என்ற தனிப்பிறவி

அவரின் வாழ்க்கையின் இந்த ஒரு நிலையினை இன்றுவரை என்னால் கற்பனை செய்துகூட பார்க்கமுடிந்ததில்லை.
ஒரு ஏழை தன் வாழ்க்கையில் பணக்காரன் ஆகி மறுபடியும் ஏழ்மைக்கு தாழ்ந்துவிடலாம். அது ஒரு பிரச்சனையுமில்லை. ஆனால் ராஜவாழ்க்கை வாழ்ந்தவன் ஒருவன் ஏழ்மையினை சுவைத்திடல் கூடாது. அது கொடுமை.
கொஞ்சமாவது நினைத்துப்பாருங்கள், பள்ளி செல்ல குதிரைபூட்டிய சாரட் வண்டிதான், தினமும் பட்டுச் சொக்காய்தான், இப்படியொரு ஆர்ப்பாட்டமான ராஜவாழ்க்கை 13 வயதில். அதாவது ரெண்டுங்கெட்டான் வயது. அப்பொழுது ஒருநாள் அவரின் அம்மா (பச்சையாத்தா) சொன்னாள், நாம் நாளையிலிருந்து வேறு வீட்டுக்கு சென்றுவிடவேண்டும் மற்றும் இனி பள்ளிக்கு நடந்துதான் செல்லவேண்டும்.
எப்படி இருந்திருக்கும் அந்தவயதில் அவனுக்கு. முந்தின நாள் ராஜா, மறுநாள், இன்று ஆண்டி. அதன்பின் அவரின் மனம், 80 வயதுவரை அதனினால் ஏற்பட்ட வடுவினை மறக்கத்தயாரில்லை.
இப்படியான என் அய்யாப்பாவின் வாழ்வு, எந்த எதிரிக்கும்கூட அமைந்துவிடக்கூடாது என்பது என் பிரார்த்தனை.
45 வது வயதில் வந்த நோயினால் இறந்துவிடுவோமோ என்ற அஞ்சியேதான் தன் மூத்தமகனுக்கு திருமணம் முடித்துவைத்தார்.
யாரிடமும் தேவையில்லாமல் பேசமாட்டார். முகம், பார்க்க சிடுமூஞ்சி போல தோன்றும், கோபம் விடுக்கென்று கொப்பளிக்கும். ஆனாலும் ஆழ்மனத்தில் அவர் ஒரு ஏக்கமுள்ள அமைதிமனிதன், குழந்தை. என் அய்யாம்மாவுக்கு அது தெரிந்தேயிருந்தது.
காலை 4 மணிக்கே விழுத்துவிடுவார். பலசரக்குக் கடைக்கு சென்றுவிடுவார். வீட்டிலிருக்கும் சமயம் அவரிருக்கும் இடத்திற்கு அவர் முன் யாரும் நின்றதில்லை. அவர் அடிமைபோல் இருந்தது அவரின் 2 ஆம் மகனிடம் மட்டும்தான். நேர்மை, சொன்னசொல் மாறாமை, நேரம் தவறாமை, நடப்புகளை உணரும் தன்மை, இதுதான் அவர். அவரின் ஒரேயொரு முடிவு மட்டுமே எனக்கு ஒப்புதலில்லை (என் தாயின் நகைகளை திருப்பித்தர நகை தருவதற்க்குப்பதில் பணம் கொடுப்பதாக சொன்னார்). அவருக்கும் என் தாயினை எந்த சந்தர்பத்திலும் பிடித்ததில்லை.
என் அய்யாம்மா இறந்ததினை அவரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. என்னிடம் இப்பொழுது மிகவும் அன்புடன் இருப்பார். வெளியே எங்கேயாயினும் செல்லவிரும்பினால் என்னையே அழைத்துச் செல்வார்.
நல்ல முருக பக்தர். திருச்செந்தூருக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை செல்லவில்லைஎன்றால், மனம் இருப்புக்கொள்ளமாட்டார். விடியலில் புறப்பட்டுச் சென்றவுடன் ஒரு சிங்கிள் ரூம் போடுவார். பேரனுக்குக் கடலில் குளிக்க மிகவும் பிடிக்கும் என்பதால் கடலில் குளிப்பார். அவன் மூன்று மணிநேரம் கடலில் ஆட்டம்போடுவதை தூரத்தில் இருக்கும் ஒரு திண்டில் அமர்ந்து கண்கொட்டாமல் ரசிப்பார். பின்னர் அருமையான இறைதரிசனம் முடித்து திவ்வியமாக இரண்டு இட்டிலி உண்பார். இப்படியே மறுநாளும் தொடரும். இப்படி ஒரு 15 முறையாவது அவருடன் அவன் சென்றிருப்பான்.
சிலநேரம் வீட்டில் திடீரென்று அவனைக்கத்தி அழைப்பார். தன் வாழ்க்கையின் சிறந்த, இன்பமான, விரும்பிய நினைவுகளை அவனிடம் சொல்லி ஆணந்திபார். இப்பொழுது சிலநேரங்களில் சிறுகுழந்தையினைப்போல அழவும் செய்வார். விளக்கம் சொல்லமாட்டார். வீட்டிற்குள் என் அல்லது பாலனின் கையைப் பிடித்துக்கொண்டுதான் நடப்பார். பின்னர் ஒருநாள் தானாக பாத்ரூம் சென்று கீழே விழுந்துவிட்டார். கால் முறிந்துவிட்டது. நடக்கமுடியவில்லை. பகலில் பாலன் பணிவிடை செய்வான். இரவில் நான். மற்றவைகளுக்கு அம்மா.
அவர் தன் பழைய வாழ்க்கையில் இனிப்பு என்ற ஒரு சுவையை அறிந்திருக்கவில்லை. காப்பிக்குகூட கசப்பாய்த்தான் சாப்பிடுவார். ஒருநாள் இரவு 2 மணிக்கு மிட்டாய் வேண்டுமென்று கேட்டார். கொடுக்கப்பட்டது.
ஒவ்வொருநாள் இரவும் இது நடந்தது. திடீரென ஒருநாள் படுக்கைப்புண் வந்துவிட்டது. மகன்கள் அதைத்தடுப்பதற்குரிய ஒரு படுக்கையை வாங்கிக்கொடுத்திருக்கலாம். மற்றும் வெளியே அவர் செல்ல ஒரு தள்ளும் சேர் ஏற்பாடு செய்திருக்கலாம். செய்யவில்லை, அப்படியெல்லாம் நினைத்துக்கொண்டிருக்க முடிவதில்லை யாருக்கும். அவரவர் குடும்பம் அவர்களுக்கு. டிவி வந்திருந்த பொழுது அது. டிவி பார்க்கும் ஆசையும் அவருக்கு இருந்தது. தலையைச் சாய்த்துத்திருப்பி கவனிப்பார். கண்ணுக்குத் தெரியாது. அந்த சமயம் அந்தளவுக்கு வசதிவாய்ப்புகள் மகன்களுக்கு இருந்தது. செய்யவில்லை.
டாக்டர் புண் வந்ததால் மிட்டாய் சாப்பிடுவதை நிறுத்தச் சொல்லியிருந்தார். ஓர் இரவு நான் மிட்டாய் கொடுக்கமுடியாது என்று சொல்லி, பின்னர் கொடுத்துவிட்டேன். அதை அவர் குழந்தைகள் அவரைச் சந்திக்க வந்தபொழுதெல்லாம் சொல்லித்தீர்த்தார்.
ஒருநாள் டாக்டர் பல்ஸ் குறைந்ததை உணர்ந்து ஒருநாள் கூட தாங்காது என்றார். அவரை உடனே ஒரு கார் பிடித்து சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர் மகன்கள், அவரின் இறப்பை எதிர்நோக்கி. ஊர் எல்லையைத் தொடும் சமயம் அவர் எழுந்து உட்கார்ந்தேவிட்டார். அவருக்கு இறப்பதற்கு பயம் இருந்ததில்லை. ஆனால் அவருக்கு இறக்க விருப்பமில்லை கடைசிவரை. கொண்டுசென்ற மகன்களுக்கோ கோபம். அது அவர்களின் வார்த்தைகளில் நன்றாகவே வெளிப்பட்டது. தந்தை பிழைத்துவிட்டதில் எந்த மகனுக்கும் சந்தோசமில்லை.
இப்படியொரு வாழ்க்கையும் எவருக்கும் அமைந்துவிடக்கூடாது என்பதுவும் என் விருப்பம்.
அதன் பின் அவர் ஆறு மாதங்கள் வரை இறந்த வாழ்க்கை வாழ்ந்தார். அப்பொழுதும் அவர் எனக்கும் பாலனுக்கும் மட்டுமே நண்பர்களாய் இருந்தார்.
அவர் இறந்த பொழுது, நான் அவரின் அருகினிலில்லை. மாலையில் அவர் ஊருக்குச் சென்றார். மறுநாள் காலையில் ஒரே தலைவலி எனக்கு. இதுநாள்வரை அப்படியொரு தலைவலி எனக்கு வந்ததேயில்லை. ஒரு பதினோரு மணியளவில் பட்டென தலைவலியில்லை. மறைந்துவிட்டிருந்தது. ஆனால் அந்த போன் வந்தது, அவரின் இறந்த செய்தியினை ஏற்றிக்கொண்டு.
மாமனிதர் அவர்.

No comments:

Post a Comment