Wednesday 21 December 2011

என்று கனியும் இந்தக் காதல்

மின்சாரம் தொட்டதும் பட்டென
எரிந்துவிடும் மின் விளக்குபோல்,

துடிப்புடன் மூளையினுள் நீந்திக்கிடக்கும்
தூண்டப்பட்ட இன்ப நினைவலைகள்,

உன்பற்றிய எண்ணங்கள் உரசினவுடன்
பற்றி எரிக்கிறது என் நரம்பு மண்டலத்தை.

சக்தியின் மருவாய் பூமியில் மண்குழைத்து
பிராணன்கூட்டி உயிர்ப்புடன் வெளித்தள்ளும்,

ஒரு காட்டுக் கொடியினை, பூத்து
மலரச் செய்ய வைக்க முடிந்திருக்கின்றது,

நம்மையும் கடவுளிடம் இட்டுச்செல்லும்
காமம், தவறில்லை என்பது புரியவில்லையா?

மல்லிகையின் மணத்தில், மங்கையின்
மணத்தையும் குழைத்து வந்த தென்றல்,

தேனாய் இனிக்கும் கூப்பதநீர் காய்ச்சிய
காதலியின் கைருசி கலந்த இனிமை,

விரவிக்கிடக்கும் காட்டெல்லையில்,
விலகிக்கிடக்கும் வயல்வேளிபோல்

என்னைவிட்டு உதறிநிற்கும் கண்மணியே,
கண்டுகொள்ளாயோ புதிர்ப் பெண்மணியே,

இந்த உடலில் உயிர் ஒட்டிக்கிடப்பதுவும்
கட்டிமிதப்பதுவும் உனக்காகவே என்பதினை.

விக்கலும், நகைப்பான உன் நக்கலும்
உன்னையே நினைவுபடுத்திய வண்ணம் நிற்க,

கொலைக்களம் விரித்துக்கிடக்கும் விழிகள்,
கலைத்தளம் ஆடிநிற்கும் உன் கொடியிடைகள்,

உயிரினுள் சின்னச்சின்ன கொலைகள்
செய்து, தோளில் வளைய வருவதேப்போழுது?

கூட்டுக்குள் துணை தேவையில்லை.
வாட்டும் துன்பமும் இங்குயில்லை.

பாட்டுக் குயில்கள் கூவிக்களித்திட,
கூடித்திரிந்திட கட்டுப்பாடு எங்கும் இல்லை.

தோட்டத்து மலர்கள் மலர்ந்து சிரித்திட
மணம்பரப்பி கலந்திட மறுப்பதுமில்லை.

தொட்டுவிட்ட தென்றலும் தொடுசுகம்
வேண்டிவந்து தடவித் தழுவுவதுமில்லை.

சொட்டிவிடும் மழைக்கும் முகவரி
கண்டு பொழிந்திடும் அவசியமில்லை.

வட்டமிடும் வண்டுகள் பூவினுள் வீழ்ந்து,
தேன்குடித்திட அனுமதி வேண்டுவதில்லை.

காட்டு மான்கள் காலாற குதித்து நடந்திட
வீட்டு வெளியில் விண்ணப்பமிடுவதில்லை.

சுட்டுவிரல் எனைநோக்கிக் காட்டிட்ட,
சுகராகம் எனக்குள் சுந்தரமாய் பாடிட்ட

கட்டிக்கரும்பே, கனியமுதே, கண்மணியே,
கலையாத கொடிமுல்லையே, காதலியே,

வெட்டிச்செதுக்கின சிலையே, மனக்கூட்டினுள்
நுழைய என்னை மட்டும் அனுமதி மறுப்பதேனோ?

வைகைக்கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பாத்தா சொல்லு.

மிஞ்சிநின்ற பஞ்சு நெஞ்சம்தனை
கெஞ்சி கெஞ்சித் தொலைத்தேவிட்டேன்.

அஞ்சி அஞ்சி மயங்கி மறைந்தேநின்று
தஞ்சம் கொள்ள மறந்தேவிட்டேன்.

கார்மேகம்தனையே கண்ட மயில்,
தொகைதனையே விரித்தாடக்கண்டு,

வான் அளந்த உறவாம் வான்கோழி
வாடிநிற்குதே தன் வடிவழகை கண்டு.

குரல் மாறிக் கூவும் குஞ்சிக் குயிலினை
கூட்டிலிருந்து விரட்டி நிற்குமே காக்கை,

கொண்ட அன்பினை கொன்று சிதைத்து,
கண்ட பொழுதெல்லாம் ஏங்கும் குயிலை.

கண்டு கண்டு வெம்பித்துடித்தே
விம்மிவிம்மி வாடிநிற்கும் என்மனம்,

தேடிய மணம், மல்லிகையிலும் இல்லை,
கூடிய காதல், கொண்டவளிலும் இல்லை,

பாடிய குரல் இதமாய், இன்பமாய் கேட்குதடி
ஆடிய தென்றல் ஏற்றிவிட்ட காதலியிடம்.

கார்குழலி உன் அன்பையும் கண்டேன்
கன்னம்குழியும் உன் சிரிப்பையும் வென்றேன்.

சின்னச் சின்ன உன் முகச் சுழிப்பையும்
சிதறிக்கிடக்கும் உன் சிந்தனையையும்,

சிங்காரமாய் சித்தரிக்கும் சிகப்பழகாம்    

உன் செவ்விதழையும் சேரவே துடிக்கும் என்மனம்.

No comments:

Post a Comment