Wednesday 31 August 2011

பூர்வீகவீடு

ரோஜா பாதங்கள் பதித்து
அன்ன நடையுடன்
வலம் வந்த வீடு.
ஓங்கி வளர்ந்த
ஆலமரத்தின் அசைவுகளில்
தலையை ஆட்டிப்பார்க்கும்
ஆந்தையின் அழகை
அருகினிலேயே பெற்ற வீடு.
பின்னாளில் கொசு உற்பத்திக்கேந்திரமாய்
உருப்பெற்ற குளுமையான ஆற்றின்
கரையினில் அமைந்த வீடு.
வைகாசியில் மாரியம்மாளின்
திருவிழாவினை கண்டு களிக்க
தலைமையேற்ற வீடு.
குடையுடனேயே, முழுமையான
கம்பீர வாழ்க்கை வாழ்ந்த தாத்தா,
24 மணிகளில் 23 மணிகள் போதாமல்
தேனியின் வாழ்க்கை பெற்ற பாட்டி.
குடிப்பதேன்னவோ
ஆவின் மடுவினிலேயே பால்,
இடும் முட்டை, தரைபடும் முன்
கொட்டப்பட்ட தோசையில்
அரைவேக்காடாய்,
மற்ற நேரமெல்லாம்
கொடிக்காப்புளி வேட்டை, அந்தியில்
மொத்த குடும்பமும் தாயக்கட்டம்,
ஓர விழிகளில்
அத்தைமகளின் முதற்காதல்,
இப்படியே
வருட விடுமுறை நாட்கள்
அத்தனையும் கழிந்த வீடு.
சட்டையுரித்த பாம்பு, அழகின் உச்சம்.
ஆனால்
காரைஉதிர்ந்து செங்கல்கள்
வெளித்தெரிய சட்டை கிழிந்து
எழும்பும் தோலுமாய்
நின்றிருக்கும் வீடு, அழகின் எச்சமாய்.
வாரிசுகள் மொத்தம் பதினெட்டுப்பேர்,
உறவுகள் ஓட்ட வகையில்லை.
குட்டிசுவராகிப்போன வெட்டி வரலாறு.
இன்னமும் சிரித்துக்கொண்டே
நிமிர்ந்து வரவேற்றுநிற்கும்
எங்கள் கிராமத்து வீடு.

No comments:

Post a Comment